Home கலை உலகம் பாலுமகேந்திரா மறைவு – ஒட்டுமொத்த திரையுலகமும் கண்ணீர் அஞ்சலி!

பாலுமகேந்திரா மறைவு – ஒட்டுமொத்த திரையுலகமும் கண்ணீர் அஞ்சலி!

1232
0
SHARE
Ad

baluinside1சென்னை, பிப் 14 – தமிழ் சினிமாவில் வசனங்களை விட காட்சிகளை பேச வைத்த ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், தலைசிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா நேற்று மாரடைப்பால் காலமானார். நேற்று அதிகாலை உறக்கத்தில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக வடபழனியில் உள்ள விஜயா நர்சிங் ஹோமில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அங்கு பாலு மகேந்திராவின் உயிர் பிரிந்தது.

இலங்கையில் பிறந்தவர்

#TamilSchoolmychoice

கடந்த 1939 ஆம் ஆண்டு இலங்கை பட்டிகலோயாவில் பிறந்தவரான பாலுமகேந்திரா, இலங்கையில் பள்ளி படிப்பையும், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பையும் முடித்தார். பின்னர் சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இந்தியாவில் உள்ள புனேயில்  இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் ஒளிப்பதிவு பயின்று, தங்க பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றார்.

அதன் பின்னர் கடந்த 1971 ஆம் ஆண்டு, நெல்லு என்ற மலையாள படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி திரையுலகிற்கு அறிமுகமான அவர், இயக்குநர், வசனகர்த்தா, படத்தொகுப்பாளர் என பல திறமைகளை வளர்த்துக் கொண்டார்.

அதுவரை, வெறும் வசனங்களால் கட்டுண்டு கிடந்த தமிழ் சினிமாவை, காட்சிகளால் அலங்கரித்தார். இயற்கை வெளிச்சத்தில் எளிமையாக படபிடிக்கும் இவரது திறமை அனைவராலும் அறியப்பட்டது. பாலுமகேந்திரா படம் என்றால் மற்ற படங்களின் சாயல் இன்றி தனித்துவமாக தெரியும் அளவிற்கு காமிரா கோணங்களிலும், காட்சிகளிலும் வித்தியாசத்தை புகுத்தினார்.தென்னிந்திய சினிமாவை குறிப்பாக தமிழ் சினிமாவை புதிய பரிணாமத்திற்கு அழைத்து சென்றவர்களில் பாலுமந்திரா குறிப்பிடத்தக்கவர்.

ஒப்பற்ற கலைஞனுக்கு தேசிய விருதுகள்making-61

கடந்த 1979ம் ஆண்டு ஆழியாத கோலங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடி எடுத்த பாலுமகேந்திரா, அதன் தொடர்ச்சியாக மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்திய ராகம், வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாகாலம் ஆகிய படங்களை இயக்கினார்.

பாலு மகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகளையும், 2 நந்தி விருதுகள் என பிற மாநில விருதுகள் பலவற்றையும் பெற்றார்.

அவர் சமீபத்தில் இயக்கிய தலைமுறைகள் என்ற படம் தான் அவரின் கடைசிப் படமாக அமைந்தது. இதுநாள் வரை ஒளிப்பதிவாளராக, இயக்குநராக, படத்தொகுப்பாளராக பல திறமைகளை வெளிப்படுத்திய பாலுமகேந்திரா, தலைமுறைகள் படத்தில் சிறந்த நடிகராகவும் தன்னை நிரூபித்தார்.

குடும்பம் 

மறைந்த பாலுமகேந்திராவிற்கு 74 வயது. அவருக்கு அகிலேஷ்வரி என்ற மனைவியும், கெளரி சங்கர் என்ற மகனும் உள்ளனர். இவரும் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். ஸ்ரேயாஸ் என்ற பேரன் ஒருவரும் உள்ளார்.

p1588mbஇறுதிச்சடங்கு

பாலுமகேந்திராவின் திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது உடல் வடபழனியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாலுமகேந்திரா கிறிஸ்தவ மதத்தில் உள்ள ரோமன் கத்தோலிக் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இன்று பிப்ரவரி 14ம் தேதி, நண்பகல் 12.00 மணிக்கு அவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப்படுகிறது. பாலுமகேந்திராவின் மறைவை ஒட்டி இன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.