Home கலை உலகம் “அழியாத கோலங்கள்” விட்டுச் சென்றுள்ள பாலு மகேந்திரா!

“அழியாத கோலங்கள்” விட்டுச் சென்றுள்ள பாலு மகேந்திரா!

3194
0
SHARE
Ad

Balu Mahendra 300 x 200பிப்ரவரி 19 – அண்மையக் காலத்தில், புதிய இளம் இயக்குநர் ஒருவர் பாலு மகேந்திராவைச் சந்தித்து சினிமா குறித்து அளவளாவிக் கொண்டிருந்த போது,புகழ் பெற்ற தெலுங்குப் படமான சங்கராபரணம் குறித்து அந்த புதிய இயக்குநர் பெருமையாகப் பேசினாராம். அந்தப் படத்தின் சிறப்புக்களைப் பற்றி பாலு மகேந்திராவிடம் அடுக்கிக்கொண்டே போனாராம்.

#TamilSchoolmychoice

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டே வந்த பாலு மகேந்திரா, ஒரு கட்டத்தில் சொன்னாராம்: “உங்களுக்கு அந்தப் படத்தைப் பற்றி இன்னொரு விஷயம் தெரியுமா? அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் நான்தான்!”

அந்த இளம் இயக்குநரும் விக்கித்து அதிர்ச்சியடைந்து விட்டாராம்!

தென்னிந்திய சினிமாக்களில், குறிப்பாக தமிழ்ப்படங்களில் இதுவரை வெளிவந்த சிறந்த சில படங்களைத் தேர்ந்தெடுத்தால், அவற்றின் பின்னணியில் பாலு மகேந்திரா இருந்திருப்பார், ஒளிப்பதிவாளராகவோ, இயக்குநராகவோ!

முதலில் ஒளிப்பதிவாளராக, தனது கேமராக் கருவியின் மூலம் கவிதைகள் படைக்கத் தொடங்கியவர்தான் பாலு.

கே.விஸ்வநாத்தின் சங்கராபரணம், மகேந்திரனின் முள்ளும் மலரும் போன்றவை சிறந்த படங்கள் வரிசையில் சரித்திரத்தில் இடம் பெற்றதற்குப்  பின்னணியில் பாலுவின் உழைப்புக்கும், அவருடைய ஒளிப்பதிவுத் திறனுக்கும் முக்கிய பங்கிருக்கின்றது.

 “அழியாத கோலங்கள்”

Shoba Pasi 300 x 200விடலைப் பையன்களின் காதல் உணர்வுகளையும், அவர்களது இளம் வயது பள்ளிப் பிராயத்து சம்பவங்களையும் வைத்து உருவான படம் அழியாத கோலங்கள். அதுதான் பாலுவின் இயக்கத்தில் வந்த முதல் தமிழ்ப் படம்.

அதற்கு முன்பாக கோகிலா என்ற கன்னடப்படத்தை இயக்கியிருந்தார் எனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கத்தி முனையில் நடப்பது போன்ற, மாணவர்களிடையே காணப்படும் சில ஆபாசமான சம்பவங்களைக் கொண்டிருந்த அழியாத கோலங்களைத் திறமையாகக் கையாண்டு அந்தப் படத்தை வெற்றிப் படமாக்கி தமிழ்த் திரையுலகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இன்றைக்கு தங்கர் பச்சான் முதற் கொண்டு கோலிசோடா மில்டன் வரை பல ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாக வெற்றிக் கொடி நாட்டுவதற்கு ஆரம்பத்தில் அடித்தளம் அமைத்தவர் பாலு மகேந்திராதான். அவருக்கு முன்பாக திறன் வாய்ந்த ஒளிப்பதிவாளர்கள் பலர் இருந்தபோதும் இயக்குநர்களாக அவர்கள் அவதாரம் எடுப்பதும் வெற்றி பெறுவதும் அரிதாகவே இருந்தது.

கர்ணன் போன்ற ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காக இருந்தனர்.

அழியாத கோலங்கள் படத்தில் ஷோபாவைக் கதாநாயகியாகக் காட்டினார் பாலு மகேந்திரா. எளிமையான அழகுடன், எந்தவித கவர்ச்சியும் காட்டாது,  திரையுலக ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்த ஷோபா, பின்னர் பசி போன்ற படங்களில் நடித்து உச்சகட்ட புகழை எய்தினார்.

பாலு மகேந்திராவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவரோடு இணைத்துப் பேசப்பட்டார் ஷோபா.

பின்னர் ஷோபாவுக்கு நேர்ந்த தற்கொலை மரணம் பாலு மகேந்திராவின் வாழ்க்கையில் இறுதிவரை ஒரு கரும்புள்ளியாக இருந்தது என்பதோடு பலவிதமான பத்திரிக்கை ஆரூடங்களுக்கும் தீனி போட்டுக் கொண்டே இருந்தது.

இருப்பினும், கால ஓட்டத்தில் பாலுவின் சினிமாத் திறனும் ஆளுமையும் அந்த சம்பவத்தைப் பின்னுக்குத் தள்ளி பாலுவை மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வந்தது.

“மூடுபனி – மலேசியப் பத்திரிக்கைக்கு எழுதப்பட்ட கதை

இயக்குநராக பாலு மகேந்திராவின் மற்றொரு பதிவு மூடுபனி’. இதுவும் வெற்றிப் பட வரிசையில் சேர்ந்தது.

1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் தமிழ் நேசன் நாளிதழில் ஆசிரியர் பணியை விட்டு விலகிய பிரபல பத்திரிக்கையாளர் முருகு சுப்ரமணியன் நடத்தி வந்த பத்திரிக்கை புதிய சமுதாயம்’.

அந்த பத்திரிக்கையில் தமிழ் நாட்டு எழுத்தாளர் ஒருவரின் தொடர்கதை ஒன்றை பிரசுரிக்கலாம் என முருகு சுப்ரமணியன் முடிவு செய்து அப்போது பிரபல மர்மக் கதை எழுத்தாளராக இருந்த ராஜேந்திர குமார் எழுதிய தொடர்கதைதான் இதுவும் ஒரு விடுதலைதான்’.

கதை வெளிவந்து, சில மாதங்கள் கழித்து அந்தக் கதைதான் பாலு மகேந்திராவின் மூடுபனியாக மாறியிருக்கின்றது என்ற தகவல்கள் வெளிவந்தன.

இந்தப் படத்திலும், ரசிகர்கள் மறக்க முடியாமல் என்றும் நினைத்திருக்கும் அளவுக்கு சில காட்சிகளை தனது ஒளிப்பதிவுத் திறனால் பாலு காட்டியிருந்தார். மூடியிருக்கும் மரக் கதவுகளில் இருக்கும் ஓட்டைகளின் வழியே பரவும் சூரியனின் ஒளி வெள்ளத்தை பாலு மகேந்திரா படம் பிடித்துக் காட்டியிருந்த விதம் அந்தக் காலத்தில் சினிமா விமர்சகர்களால் பெரிதும் சிலாகித்துப் பேசப்பட்டது. அதற்குப் பின்னர் இதுபோன்ற காட்சிகள் பல படங்களில் இடம் பெற்றன.

அழியாத கோலங்களில் வந்த பிரதாப் போத்தனும், ஷோபாவும் மீண்டும் இந்த படத்தில் இணைந்தனர்.

“மூன்றாம் பிறை”

Moonram Pirai 300 x 200பாலு மகேந்திராவின் உச்ச கட்ட படைப்பாக இன்றைக்கும் கருதப்படுவது மூன்றாம் பிறை படம்தான். அதற்கு மற்றொரு முக்கியக் காரணம் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் தங்களின் நடிப்புத் திறனால், பாலு மகேந்திரா படைத்த கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி திரையில் உலவ விட்டதுதான்.

பல திரைப்பட விருதுகளை அள்ளிவந்த அந்தப் படத்தின் இறுதிக் காட்சி என்றென்றும் பேசப்படும் வண்ணம் அமைத்திருந்தார் பாலு மகேந்திரா. ரசிகர்களின் மனங்களைப் பாதிக்கும் வண்ணம் கவிதை உணர்வோடு வெகு சில வசனங்களுடன் மட்டுமே படமாக்கப்பட்டிருந்த அந்த இறுதிக் காட்சியில் கமல்ஹாசன் வழங்கிய நடிப்புதான் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

எத்தனையோ படங்களில் சில்க் சிமிதா கவர்ச்சி காட்டியிருந்தாலும், இந்தப் படத்தில் அவர் காட்டிய விரக தாபமும், கமல்ஹாசனோடு ஆடிய ‘பொன்மேனி உருகுதே’ பாடலும் வெகுநாட்களுக்கு அவரை தமிழ் சினிமா ரசிகனின் கனவுகளில் நிறைத்து வைத்திருந்தது.

மறுபடியும்

Arvindsamy 300 x 2001993இல் வெளிவந்த மறுபடியும் அதிகம் பேசப்படாத படமாக இருந்தாலும், மனிதர்களின் உணர்ச்சிகளை குறிப்பாக கணவன் மனைவி பந்தங்களுக்குப் பின்னால் இழையோடும் நுணுக்கமான மன உணர்வுகளை அற்புதமாகப் பதிவு செய்திருந்த ஒரு படம்.

அப்போது பிரபலமாக இருந்த அரவிந்த்சாமி அந்தப் படத்தில் தனது இயல்பான நடிப்பை வழங்கி அந்தப் படத்தின் வெற்றிக்கும் ஒரு காரணமாக அமைந்தார்.

கணவனை விட்டுப் பிரிந்த மனைவி ஒருத்தியின் வாழ்வில் அன்பைப் பொழியும் அழகான ஆடவன் ஒருவன் எதிர்ப்பட்டால் அவளது மனமும் எப்படியெல்லாம் தத்தளிக்கும் என்பதை அரவிந்த்சாமி-ரேவதி நடிப்பில் ரசிகர்களைக் கவரும் வண்ணம் காட்டியிருந்தார் பாலு.

அந்தப் படத்தில் திரைப்பட இயக்குநர் கதாபாத்திரத்தில் வரும் கதாநாயகனின் வாழ்வில் நடப்பதாகக் காட்டப்படும் வரும் பல சம்பவங்கள் பாலு மகேந்திராவின் வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்த சம்பவங்கள்தான் என்றும் கூறுவார்கள்.

மலேசியாவில், திரையரங்குகள் அதிகம் இல்லாத காலத்தில், கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா பகுதியிலுள்ள செமுவா ஹவுஸ் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் அமைந்திருத்த சிறிய திரையரங்கில் மறுபடியும் படம் ஓரிரு மாதங்கள் வரை ஓடியது என்பதும் மற்றொரு சுவாரசியமான தகவல்,

கல்யாணம் ஆனவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என படத்தைப் பற்றிய கருத்துக்கள் பரவப் பரவ, பல தம்பதிகள் ஜோடி ஜோடியாக அந்தப் படத்தை வந்து பார்த்துச் சென்றனர்.

பாதை மாறிய பிற்காலப் படங்கள்

Balu Mahendra 2 - 300 x 200ஆனால், பிற்காலத்தில் பாலு மகேந்திரா ஏனோ தனது பாதையில் இருந்து விலகி வீடு’,‘சந்தியா ராகம் போன்ற படங்களை இயக்க ஆரம்பித்தார். அவை ஓர் இயக்குநராக அவருக்கு பாராட்டுக்களை குவித்தாலும், சாதாரண தமிழ் ரசிகனிடமிருந்து அவரைத் தள்ளி வைத்தது.

யதார்த்தம் கலந்து, பிரபலமான நடிகர்களின் சிறப்பான நடிப்பை வெளிக்கொணரும் வண்ணம், வணிக ரீதியிலான படங்களைத் தந்து ரசிகர்களைக் கவர்ந்த பாலு மகேந்திராவின் சினிமாப் பயணம் சற்றே மாற, அவரது படங்களும் தொடர்ந்து தோல்வியைத் தழுவின,

“நீங்கள் கேட்டவை” என்ற பெயரில் இதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்று கூறிக் கொண்டு தியாகராஜனையும் (பிரசாந்தின் அப்பா) பானுசந்தரையும் கதாநாயகர்களாகப் போட்டு ஒரு மோசமான படத்தையும் பாலு மகேந்திரா தந்திருக்கின்றார்.

தனுஷை வைத்து அவர் எடுத்த அது ஒரு கனாக்காலம் படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படுதோல்வி .தழுவிய படங்களில் ஒன்று.

இறுதியாக அவர் இயக்கிய தலைமுறைகள் படம், அவரது சிஷ்யர்களில் ஒருவரான சசிகுமார் தனது குருவிற்கு வழங்கிய குருதட்சணை போல் அமைந்ததே தவிர, சினிமா ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அந்தப் படத்தில் பாலு மகேந்திரா நடித்தார் என்பதும் அது ஒன்றுதான் அவர் நடித்த படம் என்பதும் அந்தப் படத்தின் மற்ற சிறப்புகள்.

இருந்தாலும், தமிழ் சினிமாவின் இயக்குநர் பிதாமகர்கள் என்று கலாரசிகர்களும், விமர்சகர்களும் வரிசைப்படுத்தும்போது அதில் முதல் ஐந்து இயக்குநர்களில் ஒருவராக நிச்சயம் பாலு மகேந்திராவும் இடம் பிடிப்பார்.

அந்த வகையில், தமிழ் சினிமாவை ஒளிப்பதிவிலும், இயக்குநர் துறையிலும் முன்னெடுத்துச் சென்றவர் என்ற முறையில்,‘அழியாத கோலங்களை தமிழ் சினிமாவின் தடத்தில் பதித்துவிட்டுச் சென்றிருக்கின்றார், பாலு மகேந்திரா!

-இரா.முத்தரசன்