சென்னை, பிப்ரவரி 14 – திடீரென மரணம் அடைந்த பிரபல இயக்குநர் பாலுமகேந்திராவின் உடல் தகனமும் இறுதிச் சடங்குகளும் இன்று சென்னையில் நடந்தேறின.
அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, உன் கண்ணில் நீர் வழிந்தால் உள்பட பல படங்களை இயக்கியும், ஒளிப்பதிவும் செய்து தமிழ்த் திரையுலகின் தனியிடம் பிடித்த பாலுமகேந்திரா, நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
அவருக்கு நடிகர்–நடிகைகள், இயக்குநர்கள், பட அதிபர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்களும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பாலுமகேந்திரா உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்று பேட்டி அளித்திருந்த அவருடைய மூன்றாவது மனைவி நடிகை மவுனிகா, பாலுமகேந்திரா உடல் வைக்கப்பட்டிருந்த ‘சினிமா பட்டறை’க்கு இன்று காலை 9–30 மணிக்கு வந்தார். பாலுமகேந்திராவின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுதார். 5 நிமிடம் அங்கிருந்த அவர், பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
அதன்பிறகு இறுதி சடங்குகள் நடந்தன. பகல் 12–05 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், அமீர், சீமான், விக்ரமன், செல்வமணி, வசந்தபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர்கள் சீனு ராமசாமி, வெற்றிமாறன், சசிகுமார் ஆகியோருடன் நடிகர்கள் மனோபாலா, கருணாஸ் மற்றும் கவிஞர் அறிவுமதி ஆகியோரும் பாலு மகேந்திராவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.
ஊர்வலம், பிற்பகல் 2 மணிக்கு போரூர் மின்சார மயானத்தை அடைந்தது. 2–10 மணிக்கு பாலுமகேந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது.