சென்னை – தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை இழுக்கும் வகையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாநாட்டை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை காலை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைக்கிறார்.
இதன் காரணமாகத் சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
இம்மாநாடு நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறும். இம்மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் 8 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடக்கின்றன. வெளிநாடு மற்றும் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் தமிழ்நாட்டில் முதலீடு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு வரும் தொழில்களால் 1½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
மாநாட்டில் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷியா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. அந்த நாட்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளன.
இந்தியாவில் முன்னணி தொழில் அதிபர்களான ஆனந்த் மகேந்திரா, அனில் அம்பானி, தேபேஸ்வர், சந்தா கோச்சர், சிவநாடார் மற்றும் பல தொழில் அதிபர்களும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் வெளிநாட்டுத் தொழில் அதிபர்கள், பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்கும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குவதற்காக 30–க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.