சென்னை – காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் சேரன் மற்றும் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினிக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இயக்குநர் சேரன் நடத்தி வரும் ‘சி2எச்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி உள்ளார்.
சி2எச் என்பது படத்தைத் திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாகக் குறுந்தகட்டில் வெளியிடும் திட்டமாகும்.ஆனால், இந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை.
இந்நிறுவனத்தில் பரமக்குடியைச் சேர்ந்த பழமுத்துநாதன் என்பவர் ரூ.80 ஆயிரம் முன்பணம் செலுத்தி பரமக்குடி, பார்த்திபனூர், முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பகுதிகளின் முகவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால். சி2எச் நிறுவனம் சரியாகச் செயல்படாததால் தனது பணத்தைத் திருப்பிக் கேட்டார்.
அவரது பணத்தைத் திருப்பித் தருவதாகச் சேரனும் அவரது மகளும் ஒப்புக்கொண்டு, 27.6.2015 அன்று பழமுத்துநாதனுக்குக் காசோலை வழங்கி உள்ளனர். அந்தச் காசோலையை 4.7.2015ல் வங்கியில் செலுத்திய போது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் அந்தக் காசோலை திரும்பி விட்டது.
இதுபற்றி இயக்குநர் சேரனிடம் கேட்டபோது, 4 நாட்கள் கழித்து மீண்டும் அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தும்படியும் அதற்குள் தொகையை வங்கியில் செலுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி கடந்த 10.7.2015ல் மீண்டும் அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, அப்போதும் பணம் இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டதாம்.
இதுகுறித்துப் பழமுத்துநாதன் பரமக்குடி நீதிமன்றத்தில் இயக்குநர் சேரன் மீதும் அவரது மகள் பிரியதர்சினி மீதும் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இதுதொடர்பாக டைரக்டர் சேரன், அவரது மகள் பிரியதர்சினி ஆகிய 2 பேரையும் வருகிற 30–ஆம் தேதி பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இயக்குநர் சேரனுக்குக் கடந்த சில வருடங்களாகச் சரியான படமும் அமையவில்லை; வருமானமும் இல்லை.
சென்ற வருடம் மகளின் காதல் விவகாரத்தில் அல்லல்பட்ட சேரன், தற்போது நீதிமன்ற வழக்குகளிலும் இழுபடுகிறார், பாவம்!