கோலாலம்பூர் – தமிழ் நாவல்கள் தமிழ்ப் படங்களாக உருமாறுவது எப்போதோ அரிதாகவே நிகழும். அந்த வகையில் ஆனந்த விகடன் வார இதழில் ‘சுபா’ தொடராக எழுதி வெளிவந்த “யட்சன்” நாவலை அதே பெயரில் படமாக்கி உள்ளார் இயக்குநர் விஷ்ணுவர்த்தன்.
விறுவிறுவென்று நகரும் முதல் பாதை கதை இடைவேளையில் வந்து நிற்கும் போது, தமிழ்த் திரைப்படங்களுக்கே உரிய, சஸ்பென்ஸ் முடிச்சுகளோடு களை கட்டுகின்றது. ஆனால், இரசிகர்களை இருக்கைகளின் நுனிக்கே கொண்டு வந்து வைக்கக் கூடிய அளவுக்கு திருப்பங்கள் கொடுக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும், வழக்கமான தமிழ்ப்பட பாணிக்குத் திரும்பி, கதையைக் குழப்பி, சொதப்பி விட்டார் விஷ்ணுவர்த்தன்.
கதை – திரைக்கதை
சென்னையில் இருக்கும் படத்தின் கதாநாயகி தீபா சந்நிதி (படம்), சிறுவயதில் ஏற்பட்ட விபத்தால் ஒரு அமானுஷ்ய சக்தியைப் பெறுகின்றார். சிலவேளைகளில் அவர் தொடுகின்ற நபருக்கு பின்னர் என்ன நேரும் என்பது அவளுக்கு மனக் கண்ணில் முன்கூட்டியே தெரிந்து விடுகின்றது.
தூத்துக்குடியில், சின்னான் என்ற பெயர் கொண்ட ஆர்யாவோ, கூலிக்கு ஆளை அடித்து கை, கால்களை உடைத்துப் போட்டுவிட்டு, கிடைக்கின்ற பணத்தில், சூதாடியும், ‘தல’ அஜித் குமாரின் இரசிகனாக இருந்து அவரது ‘கட்அவுட்டுகளுக்கு’ பால் ஊற்றி, தோரணம் கட்டியும் ரகளை பண்ணுபவர்.
ஒரு சண்டையில் ஒருவனை அடிக்கப் போக, அவன் எதிர்பாராமல் மரணமடைந்து விட, போலீசுக்குப் பயந்து கொண்டு சென்னைக்கு வந்து விடுகின்றார் ஆர்யா.
பழனியில் இருக்கும் இன்னொரு கதாநாயகன் கிருஷ்ணாவோ, பழனியில் விபூதி, பஞ்சாமிர்தம் விற்கும் கடை உரிமையாளரின் மகன். சினிமா ஆசையில் காதலியிடம் பணம் வாங்கிக் கொண்டு சென்னை வருகின்றார்.
சென்னைக்கு வரும் ஆர்யா பணத்தாசையாலும், கடன் தொல்லையாலும், தம்பி ராமையா கேட்டுக் கொண்டபடி கதாநாயகியைக் கொல்ல ஒப்புக் கொள்கின்றார். தம்பி இராமையா ஏன் அந்தக் கொலையைச் செய்யச் சொல்கின்றார் என்பது இன்னொரு கிளைக் கதை.
இதற்கிடையில் ஆர்யா கொன்றவனின் அண்ணன் கூட்டத்தினர் பழிவாங்க, ஆர்யாவைத் தேடிக்கொண்டு சென்னையில் அலைகின்றனர்.
இன்னொரு முனையில் நல்லவனாக நடித்து அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக ஆசைப்படும் வில்லன். அவன்தான் கதாநாயகியைக் கொல்ல தம்பி இராமையாவை நியமிக்கின்றான்.
இவர்கள் அனைவரையும், இணைத்து ஒரே நேர்கோட்டில் கொண்டு வர, இடைவேளை வரை நகரும் கதை, அதன்பின்னர் குழப்பத்திலும், சொதப்பலிலும் சிக்கித் தவிக்கின்றது.
இந்த பலதரப்பட்ட மனிதர்களும், குழுக்களும் எப்படி இணைகின்றார்கள், மோதிக் கொள்கின்றார்கள் என்பதுதான் இரண்டாவது பாதிக் கதை.
படத்தின் பலம்
ஆர்யாவுக்கு பொருத்தமான வேடம், சவடாலாகப் பேசிக் கொண்டு, கிண்டல் பண்ணித் திரிவதிலும், ஆளை அடிப்பதிலும் சரியாகப் பொருந்துகின்றார். இரண்டாவது கதாநாயகன் கிருஷ்ணா (இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் நிஐ வாழ்க்கைத் தம்பி) உணர்ச்சிகளைக் கொண்டுவரக் கொஞ்சம் கஷ்டப்படுகின்றார். இருந்தாலும் சமாளிக்கின்றார்.
சுப்பிரமணியபுரம் படத்தில் ‘கண்கள் இரண்டால்’ என்ற ஒரே பாடல் மூலம் இரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்ட சுவாதி ரெட்டி (படம்) இடையிடையே கொஞ்ச நேரமே வந்தாலும் கவர்கின்றார். படத்தை சுவாரசியமாக்குவதற்கு அவர்தான் துணைபுரிகின்றார். துணிச்சலுடன் எல்லோரிடமும் சண்டைக்கு போகும் காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார்.
கதாநாயகி தீபா சந்நிதி பார்க்க அழகாக இருந்தாலும், நடிப்பதற்கு அவ்வளவாக வாய்ப்பில்லை.
துணைப் பாத்திரங்களில் வழக்கமாக படத்தை உயர்த்திப் பிடிப்பது தம்பி இராமையாதான். சின்னச் சின்ன தருணங்களில் கூட முகத்தை அஷ்டகோணலாக வைத்தோ, குரலை ஏற்றி இறக்கிப் பேசியோ, கொள்ளை கொண்டு விடுகின்றார்.
இறுதியில் கொஞ்ச நேரம் வரும் பொன்வண்ணனும், வழக்கம்போல் தொணதொணக்கும் ரேடியோ ஆர்.ஜே.பாலாஜியும் பரவாயில்லை. இருந்தாலும் பாலாஜி சில சமயங்களில் கூடுதலாகப் பேசி போரடிக்க வைத்து விடுகின்றார்.
படத்தில் கவரும் மற்றொரு சிறப்பம்சம் இயக்குநராகவே வரும் எஸ்.ஜே.சூர்யா. சில காட்சிகளில் வந்தாலும் தனது நடிப்பாலும், செய்கைகளாலும் கவர்ந்து விடுகின்றார்.
சினிமா எடுப்பது பற்றிய காட்சிகளும், கார் மாறி ஏறிக் கொள்ளும் ஆர்யாவும், கிருஷ்ணாவும் கார் ஓட்டுநருடன் பேசும் வசனங்களும் படத்தில் ரசனைக்குரிய மற்ற சில அம்சங்கள்.
பலவீனங்கள்
ஒளிப்பதிவு இயல்பாக புதிய கோணங்களில் இருந்தாலும், படத்தின் பல காட்சிகளை நேர்ப் பார்வையில் எடுக்காமல், கேமராவை சாய்த்து வைத்தே எடுத்திருக்கின்றார் ஒளிப்பதிவாளர். அது மட்டும் சில சமயங்களில் உறுத்துகின்றது.
இசை யுவன் ஷங்கர் ராஜா. ஆனால் எடுபடவில்லை. பாடல்கள் துண்டு துண்டாக வருவதால், அதுவும் எல்லாமே டப்பாங்குத்து பாணியில் வருவதால் இரசிக்க முடியவில்லை.
‘யட்சன்’ படத்தின் கதையை எழுதி, திரைக்கதை அமைப்பிலும் இணைந்து பணியாற்றிய இரட்டையர் எழுத்தாளர்கள் சுபா
முன்பாதியில் சுவாரசியமாகப் போகும் கதையை பின்பாதியில் தொணதொணக்கும் பேச்சுகளாலும் வழக்கமான சினிமா பாணி வில்லன்களாலும் சொதப்பியிருக்கின்றனர். நாவலின் கதையை சினிமாவுக்காக விஷ்ணுவர்த்தன் மாற்றினாரா அல்லது படத்தில் வருவது போலவே எழுத்தாளர்கள் சுபா எழுதினரா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். (நாவலை நான் இன்னும் படிக்கவில்லை).
விஷ்ணுவர்த்தனும், எழுத்தாளர்கள் சுபாவும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், அபாரமான திருப்பங்களுடன், விறுவிறுப்புடன் அமைந்திருக்க வேண்டிய திரைக்கதை.
பின்பாதியில் இரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படியே ஊற்றி அணைத்துவிட்டார்கள்.
சரி! இவ்வளவு சொல்லியாகிவிட்டது படத்தைப் பற்றி! ‘யட்சன்’ என்றால் என்ன அர்த்தம்?
எழுத்தாளர் (சுரேஷ்) சுபா தனது டுவிட்டர் பக்கத்தில் தந்திருக்கும் விளக்கம் இதுதான்:
“அர்த்தம் கேட்பவர்களுக்கு.. தமிழ்ப் பல்கலைக்கழக அகராதி யட்சன்- இயக்கன், குபேரன். தலைமையாக நின்று நடத்துபவன்.”
-இரா.முத்தரசன்