Home Photo News ஜெயிலர் : திரை விமர்சனம் – கம்பீரம், தரம் குறையாத ரஜினி! மீண்டும் சொதப்பிய இயக்குநர்...

ஜெயிலர் : திரை விமர்சனம் – கம்பீரம், தரம் குறையாத ரஜினி! மீண்டும் சொதப்பிய இயக்குநர் நெல்சன்

587
0
SHARE
Ad

(இரா.முத்தரசன்)

அண்ணாத்தே படத்தினால் எழுந்த ஏமாற்றத்தை இந்த முறை ரஜினி சரி செய்து விடுவார் – பீஸ்ட் படத்தில் சொதப்பிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தில் வீறு கொண்டு எழுவார் – என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இன்று வியாழக்கிழமை அனைத்துலக அளவில் வெளியாகியிருக்கிறது ஜெயிலர்.

ஆனால் வழக்கம்போல் நெல்சன் மீண்டும் சொதப்பி விட்டார் என்பதுதான் உண்மை. ரஜினி மேல் எந்தக் குறையும் இல்லை. 72 வயதில் அவரின் தரமான நடிப்பும் கம்பீரமும் ஸ்டைலும் இன்னும் திரையரங்கில் விசில்களையும், கைத்தட்டல்களையும் வரவழைக்கிறது.

#TamilSchoolmychoice

அப்படியானால் ஏன் படம் ஏமாற்றம் அளிக்கிறது?

கதை – திரைக்கதை

சாதாரண குடும்பஸ்தன். புதினா சட்னிக்காக மனைவியிடம் திட்டு. சாலையில் தடுமாறியதற்காக அண்டைவீட்டு வாடகைக் கார் ஓட்டுநரின் மட்டம் தட்டும் கிண்டல். ஒரு யூடியூப் காணொலி எடுக்க விரட்டும் சிறுவயது பேரன் – இப்படி உலா வரும் ரஜினியின் கதாபாத்திரம் பின்னணியில் யார் என்பதுதான் கதை. அதற்குள் இடைச் செருகல் தந்தை-மகன்-குடும்பம்- சென்டிமெண்ட்ஸ்.

காணாமல் போன காவல்துறை அதிகாரி மகனைத் தேடுகிறார் தந்தை ஜெயிலர் ரஜினி. மகனைக் கொன்றுவிட்டார்கள் என குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களைத் தேடிச் சென்று கொன்று குவிக்கிறார். இறுதியில் மகனைக் கண்டுபிடித்தாரா? அவன் உயிரோடு இருக்கிறானா? என்பதைத் திரையில் பார்க்கவும்!

எடுத்த எடுப்பிலேயே முதல் சில காட்சிகளிலேயே ரஜினியின் உண்மை சொரூபத்தைக் காட்டிவிடுவது கதையின் முக்கியச் சறுக்கல். இடைவேளையில் காட்ட வேண்டிய அவரின் விஸ்வரூபத்தை முதல் சில காட்சிகளிலேயே காட்டி விடுகிறார்கள். அழகாகத் தொடங்கும் அப்பா-மகன் உறவில் இறுதிக் காட்சிச் சம்பவங்கள் நெருடல். மகன் கதாபாத்திரத்தையும் சிதைத்துவிட்டார்கள். ரஜினியின் தந்தை கதாபாத்திரத்தின் தன்மையையும் வலுவிழக்கச் செய்து விட்டார்கள்.

இடைவேளைக்குப் பின் பெருமளவில் சொதப்புகிறார் இயக்குநர். ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன் – என்ற பயங்கரமான பெயருடன் அழுத்தமான சம்பவங்களைத் தருவார் எனப்பார்த்தால் ரஜினியை சிறைச்சாலைக்குள் கேரம் போர்டு விளையாட்டு விளையாட வைத்திருக்கிறார் நெல்சன். திஹார் சிறை ஜெயிலர் என்பதால் மாநிலத்துக்கு ஒரு வில்லனை – வேறுவேறு மொழியில் – காட்டுகிறார்கள். சில வசனங்கள் மட்டும் இளமையான தோற்றத்தில் பேசுகிறார் ரஜினி.

மோகன்லால், ஜேக்கி ஷரோப், சிவராஜ் குமார், எனப் பெரிய நடிகர்களை வளைத்துப் போட்ட நெல்சன் அவர்களுக்காக தீனி போடும் அளவுக்கு வலுவான திரைக்கதையையும் சம்பவங்களையும் அமைத்திருக்க வேண்டாமா?

எல்லோரும் வில்லன்களாக வருகிறார்கள். சட்டவிரோத ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கிறார்கள். யாரையாவது போட்டு துவம்சம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பின் சில சுவாரசியத் திருப்பங்கள் என்றாலும் சுமார் 20 நிமிடங்களுக்கு தெலுங்குப் படத் தயாரிப்பு – இயக்குநருக்கும் கோமாளிக் கதாநாயகனுக்கும் இடையில் தமன்னா மீதான காதல் – என திரைக்கதை எங்கோ செல்கிறது. தமன்னாவுக்காகவும், நகைச்சுவைக்காகவும் ரசிக்கலாம் என்றாலும், ரஜினி படத்தில் இத்தகைய இடைச் செருகல் தேவைதானா எனக் கேட்கத் தோன்றுகிறது.

தமன்னாவுடன் அந்தப் பாடல் முழுக்க ரஜினியை ஆட விட்டிருந்தால் கூட ரசிக்கும்படி இருந்திருக்கும். இசை வெளியீட்டு விழாவில் ரஜினியே வருத்தப்பட்டபடி, ஓரிரு காட்சிகளில்தான் அவர் தமன்னாவுடன் காட்சியளிக்கிறார்.

வில்லன் நடிகர் விநாயகன்

இறுதியில் விலையுயர்ந்த மகுடத்தை வில்லன் கைப்பற்ற நினைப்பதும் அதற்காக ரஜினியைப் பயன்படுத்துவதும் காதில் பூச்சுற்றல். ஓர் இராணுவம் அளவுக்கு போராளிகளையும் ஆயுதங்களையும் திரட்டி ரஜினி போராடுகிறார் என்பதும் நம்ப முடியவில்லை.

கதையின் பலவீனங்கள்

இப்படியாக படத்தின் தொய்வையும் பலவீனங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு கொடூர வில்லன் சட்டத்தை மதிக்காமல் அடுக்கடுக்காகக் கொலை செய்வது சரி! ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு நேர்மையான ஜெயிலர் அவ்வாறு செய்வாரா? அத்தனை கொலைகளை செய்துவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் இருக்க முடியுமா? காவல் துறையும் சும்மா இருக்குமா? முன்னாள் ஜெயிலர் இத்தனை சட்டவிரோத ஆயுதங்களைத் திரட்டுவாரா? இப்படி பல கேள்விகள் படம் முழுவதும் எழுகின்றன.

படத்தின் இன்னொரு பலவீனம் ரத்தம் தெறிக்கும் கொடூரக் காட்சிகள். குடும்பம் குடும்பமாக வரப்போகும் ரஜினி படத்தில் இத்தனை ரத்தப் பரிமாறல்கள் தேவையா? அநேகமாக எல்லா கதாபாத்திரங்களின் முகத்தின் மீதும் ஏதாவது ஒரு காட்சியில் ரத்தம் தெறித்து விழுகிறது. பெரிய சுத்தியலால் பல முறை மண்டைகள் உடைத்து நொறுக்கப்படுகின்றன,

படத்தைக் காப்பாற்றுவது சந்தேகமில்லாமல் ரஜினிதான்! அவர் வரும் காட்சிகளில் எல்லாம் அதே பழைய கம்பீரம் – மிடுக்கு! ஆனால் மற்ற நடிகர்-நடிகையர்களுக்கு போதிய வாய்ப்பில்லை. ரம்யா கிருஷ்ணனும் இருக்கிறாரே என எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம்!

விடிவி கணேஷ் சில காட்சிகளில் வழக்கம்போல் சிரிக்க வைக்கிறார். ரஜினிக்கு துணையாக கார் ஓட்டும் யோகிபாபுவும் பரவாயில்லை.

பின்னணி இசையிலும் ஓரிரு பாடல்களிலும் அனிருத் தன் திறமையைக் காட்டியிருக்கிறார். காவாலா பாடல் மட்டும்தான் காதுகளில் ஒலிக்கிறது. மற்ற பாடல்கள் எடுபடவில்லை. ரஜினியின் புகழ்பாடும் பாடல் இடையிடையே ஒலிப்பதால் மனதில் தங்கவில்லை. தந்தை-மகன் உறவைப் பற்றி இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் வரிகள் ஒலியமைப்பால் அப்படியே அமுங்கி விட்டது. பின்னணி இசை மட்டும் பிரமாதம்.

படத்தின் இன்னொரு ஈர்ப்பு வில்லன் விநாயகம். தோற்றமும், மலையாளம் கலந்த பேச்சு நடையும், கொல்வதில் காட்டும் கொடூரமும் அபார நடிப்பு.

தொழில்நுட்பத் தளத்தில் ஒளிப்பதிவு சிறப்பு. பிரம்மாண்டமான அரங்குகள் போட்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் நெல்சன் மீண்டும் ஒருமுறை சொதப்பி விட்டார். ரஜினி – இத்தனை பெரிய நடிகர்கள் – தண்ணீராகச் செலவு செய்ய தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸ் – இருந்தும் கதையில் போதிய கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டு விட்டார்.

ரஜினிக்காக – அவரின் கம்பீர நடிப்புக்காக – ஒருமுறை பார்த்து வைக்கலாம்!

– இரா.முத்தரசன்