Home நாடு இராமசாமி விலகலால் பினாங்கில் இந்திய வாக்குகள் குறையுமா?

இராமசாமி விலகலால் பினாங்கில் இந்திய வாக்குகள் குறையுமா?

411
0
SHARE
Ad

ஜோர்ஜ டவுன் : பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி ஜசெக கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவருடன் பகாங் மாநிலத்தின் சபாய் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூவும் ஜசெகவில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த இரு வாரங்களாக பிரச்சாரங்களில் கலந்து கொள்ளாமல் இருந்த இராமசாமி அதிர்ச்சி தரும் தன் முடிவை இன்று வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பினாங்கு ஜசெகவில் ஏற்பட்ட நெருக்கடிக்குக் காரணம் ஒரு “சக்கரவர்த்தி” எனவும் அவர் சுட்டிக் காட்டினார். அந்த சக்கரவர்த்தியால் கட்சியில் பரவலான அதிருப்திகள் நிலவுவதாகவும் இராமசாமி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக் – பினாங்கு ஜசெக தலைவர் சௌ கோன் இயோ ஆகியோருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புவதற்கு முன்பு தனது முடிவைப் பற்றி நீண்ட நேரம் யோசித்ததாகவும் இராமசாமி கூறினார்.

பிறை சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் டேவிட் மார்ஷலின் தேர்தல் நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இராமசாமி கட்சியிலிருந்து விலகும் முடிவை அறிவித்தார். தன் முடிவைத் தொடர்ந்து பிறை சட்டமன்ற சுயேட்சை வேட்பாளர் டேவிட் மார்ஷல், பாகான் டாலாம் சட்டமன்ற சுயேட்சை வேட்பாளர் சதீஸ் முனியாண்டி ஆகியோருக்கும் ஆதரவு தெரிவித்துக் கொண்டார்.

ஆற்றல் வாய்ந்த பல இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறிய அவர், காபந்து முதல்வர் சௌ கோன் இயோவை ஓரங்கட்டும் முயற்சி இது என வர்ணித்தார். எனினும் சௌ கோன் இயோவைத் தொடர்ந்து ஆதரிப்பதாகவும் பக்காத்தான் ஒற்றுமை அரசாங்கத்திற்கும், பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கும் தன் ஆதரவைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

“சௌ கோன் இயோ மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்படலாம் ஆனால் அவருக்கு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களின் வலுவான ஆதரவு இல்லை. தேசியத் தலைமையால் அவருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டாலும், சௌ கோன் இயோ முழுத் தவணைக்கும் முதலமைச்சராக இருக்க வாய்ப்பில்லை,” என்று இராமசாமி மேலும் கூறினார்.

ஜசெக உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் எம்மோடு இணைந்து சக்கரவர்த்தி என விமர்சிக்கப்படுபவரின் வம்சத்தை வீழ்த்தி, கட்சியையும் பினாங்கையும் சரியான பாதையில் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் எனவும் குறிப்பிட்ட இராமசாமி, தன்னைக் கைவிடுவதற்கான தங்கள் முடிவை ஜசெக எவ்வாறு கையாண்டது என்பது குறித்து தனது அதிருப்தியையும் மீண்டும் வெளிப்படுத்தினார்.

ஜசெகவில் இருந்து வெளியேறும் முடிவால் இந்திய சமூகம் வருத்தம் அடைந்துள்ளதாகவும், மற்றவர்களும் விரைவில் கட்சியை விட்டு விலகுவார்கள் என்றும் இராமசாமி  கூறினார். அவருடன் இணைந்து சபாய் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் காமாட்சியும் ஜசெகவில் இருந்து விலகியுள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன, புதிய கட்சி அமைப்பாரா அல்லது வேறு கட்சியில் சேருவாரா என்று கேட்டதற்கு, அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று இராமசாமி பதிலளித்தார்.

இராமசாமி விலகலாம் பினாங்கில் ஜசெகவுக்கு ஆதரவான இந்திய வாக்குகள் சிதறுமா – திசை மாறுமா என்ற கேள்விகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.