ஜோர்ஜ் டவுன் : ஜசெக சார்பில் பிறை சட்டமன்றத்திற்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 10.30 மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் முக்கியமான அரசியல் முடிவை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறை சட்டமன்றத்திற்குப் போட்டியிடாவிட்டாலும், தொடர்ந்து அவர் ஜசெக பிரச்சாரக் கூட்டங்களில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. மௌனம் காத்து வந்தார்.
இந்நிலையில் நாளை அவர் நடத்தவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு பிறை சட்டமன்றத்திற்கான சுயேட்சை வேட்பாளர் டேவிட் மார்ஷல் தேர்தல் நடவடிக்கை அறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகர்வின் மூலம் அவர் டேவிட் மார்ஷலை தனது ஆதரவை வழங்குவார் என்றும் ஜசெகவிலிருந்து விலகும் முடிவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற சில முக்கிய அறிவிப்புகளையும் இராமசாமி வெளியிடுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நடப்பு ஒற்றுமை அரசாங்கத்திற்கு அவர் தன் ஆதரவைத் தொடர்ந்து வழங்குவார் என்றும் நம்பப்படுகிறது.
பெரிக்காத்தான் நேஷனல் – பாஸ் தலைவர்கள் – மீது தொடர்ந்து கருத்து முரண்பாடுகளை வெளிப்படுத்தி வந்திருக்கும் இராமசாமி பெரிக்காத்தானுடன் இணையவோ – அந்தக் கூட்டணிக்கு ஆதரவு தரவோ வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.