Home Photo News டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – ஏழ்மைப் போராட்டத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பின்னணி –...

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – ஏழ்மைப் போராட்டத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பின்னணி – பினாங்கு துணை முதல்வர் ஆவாரா? (நேர்காணல் பகுதி – 1)

478
0
SHARE
Ad

(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் – பினாங்கு மாநிலத்தின் 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடுமையான போட்டிகள் நிகழ்ந்தாலும் அனைவரின் பார்வையும் பதிந்திருப்பது பிறை சட்டமன்றத் தொகுதியின் மீதுதான். முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி கடந்த 3 தவணைகளாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. இந்த முறை அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஜசெக – இந்திய – வாக்கு வங்கியில் பாதிப்புகள் இருக்குமா? சுயேட்சையாகப் போட்டியிடும் முன்னாள் ஜசெக நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் எத்தனை வாக்குகளைப் பிரிப்பார்? வெற்றி பெற்றால் சுந்தரராஜூ பினாங்கு மாநிலத்தில் இரண்டாவது துணை முதல்வர் ஆவாரா? என்ற கேள்விகள் பினாங்கு முழுவதும் விவாதிக்கப்படுகின்றன. பிறை சட்டமன்றத்திற்காக பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், பரபரப்பான ஒரு நாளில் – சுந்தரராஜூவை அவரின் தேர்தல் நடவடிக்கை அறையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. செல்லியலுடனான நேர்காணலில் – தனது சாதாரண, ஏழ்மையான, வாழ்க்கைப் பின்னணி, இளம் வயதில் ஏழ்மைப் போராட்டம், அதை முறியடிக்க பாதுகாவலர், டாக்சி ஓட்டுநர் என கடுமையாக உழைத்தது – வணிகத்தில் வெற்றி பெற்றது எப்படி – பிறை சட்டமன்றத்தில் வெற்றி வாய்ப்பு – என்பது குறித்த பல அம்சங்களை செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுடன் பகிர்ந்து கொண்டார் சுந்தரராஜூ)

*கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர்.

*கார் கழுவும் வேலை செய்து கொண்டே கல்லூரிப் படிப்பு

#TamilSchoolmychoice

*சீன முதலாளிக்கு டிரைவராகக் கார் ஓட்ட – நிகழ்ந்த வாழ்க்கைத் திருப்பங்கள்

பினாங்கு மாநிலத்தில் ஏற்கனவே ஜசெக வட்டாரங்களில் பிரபலமானவர்தான் சுந்தரராஜூ. பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜசெக தலைவருமான லிம் குவான் எங்கிற்கு நெருக்கமானவர் எனப் பெயரெடுத்தவர். தன் சமூக நல சேவைகளால் பல இந்திய சமூக இயக்கங்களோடு பரிச்சயம் கொண்டவர். ஈக்கோ வோர்ல்ட் (ECOWORLD) என்னும் நில மேம்பாட்டு, வீடமைப்பு நிறுவனத்தில் பங்குதாரர். அந்நிறுவனத்தில் உயர் பதவியும் வகித்தவர். அத்தகைய வணிகத்துறையில் இன்றைக்கு பெரிய அளவில் ஈடுபட்டிருக்கும் ஒரே இந்தியர் என்று கூடக் கூறலாம்.

பிறை சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக அவர் ஜசெகவால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற ஆரூடங்கள் கடந்த சில மாதங்களாகவே நிலவி வந்தன. சுந்தரராஜூ பிறை சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் – இது முதல் தேர்தல் களம் என்றாலும் – அனுபவப்பட்ட அரசியல்வாதிபோல் தனது தொகுதியில் பிரச்சாரத்தில் சுற்றிச் சுழன்று வருகிறார்.

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர்

“நான் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ஸ்காட் ரோட் கந்தசாமி ஆலயத்திற்கு அருகிலுள்ள சேத்துக் கம்பம் என அழைக்கப்படும் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தேன். இப்போது அந்தக் கம்பம் இல்லை. இலகு ரயில் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தால் அந்தப் பகுதி எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. 6 சகோதர சகோதரிகளைக் கொண்ட குடும்பம். நானும் தம்பியும் இரண்டு சகோதரர்கள். இன்று துரதிர்ஷ்டவசமாக தம்பி இல்லை. மற்ற நான்கு சகோதரிகள் – இரண்டு அக்காள் – இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். அந்த சேத்துக்கம்பம் வீட்டில்தான் நீண்ட காலம் வசித்தோம். எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு அங்குதான் திருமணம் நடந்தது. என் முதல் இரண்டு பிள்ளைகளும் கூட அந்த வீட்டில்தான் பிறந்தார்கள்.

முதலில் லா சாலே பள்ளியிலும் பின்னர் விவேகானந்தா இடைநிலைப் பள்ளியிலும் 5-ஆம் படிவம் வரை படித்து முடித்தேன். தந்தையார் சோமு ஈஸ்டர்ன் ஸ்மெல்ட்டிங் கம்பெனி என்னும் நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி ஓய்வு பெற்றார். நான் 5-ஆம் படிவம் முடிக்கும் தருணத்தில் தந்தையார் பணி ஓய்வு பெற நேர்ந்தது” என ஏழ்மை கலந்த தன் வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கத் தொடங்கினார் சுந்தரராஜூ.

பிறை சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த சரவணனுடன்…

“எனக்கோ படித்து பொறியியலாளர் (என்ஜினியர்) ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனினும் மேற்கொண்டு படிக்க இயலாத குடும்ப சூழல். சரி! வேலை செய்து கொண்டே படிக்கலாம் என எஃப்.ஐ.டி (FIT) என்னும் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து டிப்ளமா படித்தேன். எனது அக்காள் ஒரு டியூஷன் சென்டரில் வேலை செய்து வந்தார். அதை நடத்தியவர் ஒரு சீக்கியர். எனது நலனில் பெரும் அக்கறை கொண்டு வழிகாட்டியவர். அவரும் இப்போது இல்லை. அந்த டியூஷன் சென்டரில் கார் கழுவுவது – ஜன்னல், கதவு கண்ணாடிகளைத் துடைத்து வைப்பது – இதுதான் வேலை. சம்பளம் மாதத்திற்கு 70 ரிங்கிட் கிடைக்கும். அதில் 50 ரிங்கிட் படிப்புக்காக கட்டிவிட்டு மீதி 20 ரிங்கிட்டில் மோட்டார் சைக்கிளுக்கான பெட்ரோல், உணவு – என வாழ்க்கையை நடத்தினேன்” என ஏழ்மையிலும் கல்வியைத் தொடர்ந்த தன் முயற்சியைப் பெருமிதத்துடன் கூறினார் சுந்தரராஜூ.

இருந்தாலும் குடும்பத்திற்கு மேலும் வருமானம் தேவைப்பட இரவு நேரத்தில் பாதுகாவலராகப் (செக்யூரிடி) பணியாற்றியதாவும், ஒரே நாளில் 3 வேலைகள் – செய்ததாகவும் குறிப்பிடுகிறார் சுந்தரராஜூ. அதாவது பகலில் கார் கழுவும் வேலை – கல்லூரிக்கு சென்று படிப்பது – இரவில் பாதுகாவலர் வேலை.

பிறை ஜசெக சட்டமன்ற வேட்பாளர் சுந்தரராஜூ சோமு

“எப்படி தூங்காமல் வேலை செய்தீர்கள் எனக் கேட்பீர்கள்! நாங்கள் கல்லூரி மாணவர் சுமார் 5 பேர் ஒன்றாக இரவில் வேலை பார்த்தோம். அதனால் எங்களுக்குள் சுற்றுமுறையில் தூங்கிக் கொள்வோம். இப்படியாக சமாளித்து 3 ஆண்டுகளில் டிப்ளமா படித்து முடித்தேன். நான் நன்றாகத் தேர்ச்சி பெற்றதால் என்னையும் சேர்ந்து 5 மாணவர்களை கல்லூரி நிர்வாகமே தேர்ந்தெடுத்து காப்புறுதி (இன்சூரன்ஸ்) நிறுவனங்களுக்கான சங்கத்தில் இன்சூரன்ஸ் அட்ஜஸ்டர்ஸ் என்னும் வேலைக்கு (காப்புறுதி வழங்குவதற்கான காரணங்களை மறு ஆய்வு செய்யும் பணி) அனுப்பியது”

பாதுகாவலராக வேலை செய்த போது தன் வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்திய சம்பவங்களை விவரித்தார் சுந்தரராஜூ.

“செக்யூரிடியாக நான் வேலை செய்தபோது என்னை நுழைவாய் பாதுகாவல் நிலையத்தில்தான் (கார்ட் ஹவுஸ்) நிறுத்தி வைப்பார்கள். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால். அங்கு வருபவர்கள் போகிறவர்களிடம் அறிமுகம் கிடைத்தது. அவ்வாறு அறிமுகம் கிடைத்தவர்தான் டான்ஸ்ரீ லியூ கீ சின் (Liew Kee Sin) எனது முதலாளியாகவும், வழிகாட்டியாகவும் என்னை வாழ்க்கையில் உயர்த்தியவர். அவர் என்னைப் பார்த்து ‘நீ படித்தவனாக இருக்கிறாயே! ஏன் செக்யூரிடி வேலை செய்கிறாய்? எனக்கு டிரைவராக வருகிறாயா’ எனக் கேட்டார். நானும் வருகிறேன் என ஒப்புக் கொண்டேன். ஆனால் மாலை 5 மணி வரையில்தான் வேலை செய்வேன். இரவில் நான் டாக்சி ஓட்ட வேண்டும். அந்த வருமானத்தையும்   நான் இழக்க விரும்பவில்லை என்றேன். அவரும் ஒப்புக் கொண்டார். இரவில் நான் கார் ஓட்ட நேர்ந்தால் தனியாக, கூடுதலாக 50 ரிங்கிட் தந்து விடுவார். இப்படியாக அவருடனான எனது நட்பும் பழக்கமும் தொடங்கியது” என்கிறார் சுந்தரராஜூ .

சுந்தரராஜூ வணிகத்தில் ஈடுபட்டது எப்படி?

அரசியலுக்கு வந்தது எப்படி?

நேர்காணல் தொடர்கிறது.

-இரா.முத்தரசன்

அடுத்து பகுதி 2: டத்தோஸ்ரீ சுந்தரராஜூவுடனான நேர்காணல் –

*வீடமைப்புத் துறை வணிகத்தில் ஈடுபாடு எப்படி நேர்ந்தது?

*சமூக சேவைகளில் ஆர்வம் பிறந்தது ஏன்?

*அரசியல் நுழைவு நிகழ்ந்தது எப்படி?

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – கார் டிரைவராகத் தொடங்கி துணைத் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்த வாழ்க்கைப் பயணம்! (நேர்காணல் பகுதி – 2)

 

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – அரசியல் பிரவேசம் ஏன்? வெற்றி பெற்றால் துணை முதல்வரா? (நேர்காணல் நிறைவுப் பகுதி – 3)