Home Photo News டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – அரசியல் பிரவேசம் ஏன்? வெற்றி பெற்றால் துணை...

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – அரசியல் பிரவேசம் ஏன்? வெற்றி பெற்றால் துணை முதல்வரா? (நேர்காணல் நிறைவுப் பகுதி – 3)

375
0
SHARE
Ad

(பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் – அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, கடுமையான போட்டியில் வெற்றி பெறுவாரா? வெற்றி பெற்றால் பினாங்கு மாநிலத்தில் இரண்டாவது துணை முதல்வர் ஆவாரா? என கேள்விகளும் விவாதங்களும் எழுந்திருக்கின்றன. பரபரப்பான தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு நடுவில் ஒரு நாளில் – சுந்தரராஜூவை அவரின் தேர்தல் நடவடிக்கை அறையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. செல்லியலுடனான நேர்காணலில் அரசியல் பிரவேசம் ஏன்?  பிறை சட்டமன்றத்தில் வெற்றி வாய்ப்பு எப்படி? என்பது குறித்த பல அம்சங்களை செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுடன் பகிர்ந்து கொண்டார் சுந்தரராஜூ. அவருடனான நேர்காணலின் 3-வது பகுதி தொடர்கிறது)

*சமுதாயத்திற்காகவும் பயன்படும் விதத்தில் சேவையாற்ற முடிவு செய்தேன்!

#TamilSchoolmychoice

*எனக்கு வாய்ப்பளித்தது கட்சித் தலைமை! யாருக்கும் நான் எதிரியல்ல!

*கட்சி அடிப்படையிலேயே – மாநில அரசாங்க செயல்பாடுகளை வைத்தே வாக்காளர்கள் வாக்களிப்பார்கள்

பிறை சட்டமன்றத் தொகுதியில் இயங்கும் டத்தோஸ்ரீ சுந்தரராஜூவின் தேர்தல் நடவடிக்கை அறை ஆதரவாளர்களாலும், அவரைச் சந்திக்க வந்தவர்களாலும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. அந்த நடவடிக்கை அறையோடு ஒட்டிக் கட்டப்பட்டிருந்த கட்டடத்தில் இந்திய உணவகத்திலும் நிறைந்த கூட்டம்.

சுந்தரராஜூவுடனான சந்திப்பில் பினாங்கு வணிகப் பிரமுகரும் நீண்ட கால சமூக – அரசியல் – சேவையாளருமான டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலமும் இணைந்து கொண்டார். அருணாசலத்தின் மகன் டாக்டர் லிங்கேஸ்வரன் அண்மையில் செனட்டராக ஜசெக சார்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அருகில் உள்ள பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடவடிக்கை பொறுப்பாளராக லிங்கேஸ்வரன் செயல்படுகிறார்.

“முதலில் மதிய உணவு சாப்பிடுவோம். பின்னர்  உரையாடுவோம்” என பக்கத்து இந்திய உணவகத்திற்கு அழைத்துச் சென்றார் சுந்தரராஜூ. அவருடன் வேறு சில பிரமுகர்களும் மதிய உணவுக்கு இணைந்தனர்.

மதிய உணவருந்திக் கொண்டே சில தகவல்களைப் பரிமாறிக் கொண்ட சுந்தரராஜூ அதன் பின்னர் தன் அறையில், தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசத் தொடங்கினார்.

அரசியலுக்கு வந்தது ஏன்?

துணையமைச்சர் தியோ நீ சிங்குடன்…

“இக்கோவோர்ல்ட் நிறுவனத்தில் துணைத் தலைமை செயல் அதிகாரியாக, நல்ல வசதியான வாழ்க்கைச் சூழலில் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் முன்பு கூறியபடி எங்கு பணிநிமித்தம் சென்றபோதும், பினாங்கில் வாழ்ந்த கடந்த பல ஆண்டுகளிலும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டிருந்தேன். என் குடும்பத்தினருக்கு அடிக்கடி நான் ஒன்றைக் கூறி வந்தேன்.  நான் பட்ட கஷ்டங்கள் நீங்கள் படக் கூடாது. அதற்காகத்தான் நான் கடுமையாக உழைத்தேன் என அவர்களிடம் கூறுவேன். எனக்கு 4 பிள்ளைகள். 3 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் போதுமான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தித் தந்து விட்டேன். இந்த சூழ்நிலையில்தான் நான் பட்ட கஷ்டங்கள் போன்று, வாழ்க்கையில் முன்னேற சந்தித்தப் போராட்டங்களைப் போன்று எனது இந்திய சமூகமும் கஷ்டப்படக் கூடாது. அதற்காக, நம்மால் இயன்ற பணிகளை செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்கு சிறந்த களம் அரசியல்தான் என்றும் முடிவு செய்தேன். எனக்கு இப்போது 61 வயதாகிறது. உடலில் இன்னும் வலிமையையும், தெளிவான சிந்தனை ஆற்றலையும் நான் இப்போது கொண்டிருக்கிறேன். எனவே, அரசியலில் ஈடுபட இதுவே சிறந்த தருணம் என்று முடிவு செய்து களத்தில் இறங்கியிருக்கிறேன். பினாங்கு மாநிலத்தில் இருந்தபோது பாகான் தொகுதியில் இந்திய சமூகம் சார்ந்த பல திட்டங்களில் அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கிற்கு உதவியாக இருந்திருக்கிறேன். ஏற்கனவே அவருடன் நல்ல நட்பும் நெருக்கமும் இருந்தது. அதன் காரணமாக இயல்பாகவே, ஜசெகவின் வழி என் அரசியல் ஈடுபாடு விரிவாக்கிக் கொள்ள முடிவெடுத்தேன்” என விவரித்தார் சுந்தரராஜூ.

“பிறை சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட இந்த சட்டமன்றத் தேர்தலில் என்னைத் தேர்வு செய்த ஜசெக தலைமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது கட்சியின் முடிவு. அந்த முடிவுக்கு மதிப்பளித்து நான் போட்டியிடுகிறேன். அவ்வளவுதான்! மற்றபடி யாருக்கும் நான் எதிரியல்ல!” என பிறை சட்டமன்றத் தொகுதியில் தான் போட்டியிட தேர்வு செய்யப்பட்டது குறித்துக் கூறினார் சுந்தரராஜூ.

பிறை சட்டமன்றத் தொகுதி வெற்றி வாய்ப்புகள் எப்படி?

கடந்த 3 தவணைகளாக பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி வெற்றி பெற்று வந்த தொகுதி பிறை. கடந்த 2018 பொதுத் தேர்தலில் 11,243 வாக்குகள் பெற்று 9,049 வாக்குகள் பெரும்பான்மையில் இராமசாமி வெற்றி பெற்ற தொகுதி இது.

துணையமைச்சர் லியூ சின் தோங்குடன்…

இந்த முறை 20,479 வாக்காளர்களைக் கொண்டிருக்கிறது பிறை. 4 முனைப் போட்டி உருவாகியிருக்கிறது. ஜசெக-பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் போட்டியிடும் சுந்தரராஜூவை எதிர்த்து, ஜசெகவின் நீண்ட கால உறுப்பினரும் செபராங் பிறை நகராண்மைக் கழக முன்னாள் உறுப்பினருமான டேவிட் மார்ஷல் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

பிறை சட்டமன்றத்திற்கான பரபரப்பு கூடியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

மூடா கட்சி சார்பில் விக்னேஸ்வரி ஹரிகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேசியக் கூட்டணி சார்பில் ஆர்.சிவசுந்தரம் (கெராக்கான்) போட்டியிடுகிறார்.

2018 பொதுத் தேர்தல் புள்ளிவிவரங்களின்படி 51 விழுக்காடு சீனர்களையும் 36 விழுக்காடு இந்தியர்களையும் கொண்டிருக்கிறது பிறை சட்டமன்றத் தொகுதி. மலாய் வாக்காளர்கள் 12 விழுக்காடு மட்டுமே! மற்ற வாக்காளர்கள் 1 விழுக்காடு.

கெராக்கான் இங்கு பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிடுகிறது. பாஸ் கட்சியும் பெரிக்காத்தான் சின்னத்தில் இணைந்து மற்ற தொகுதிகளில் போட்டியிடுவதால் சீன, இந்திய வாக்காளர்கள் பெரும்பாலும் அந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற கருத்து எங்கும் – குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் – நிலவுகிறது.

“என்னைப் பொறுத்தவரையில் பினாங்கு மாநில வாக்காளர்கள் மாநில அரசாங்கத்தின் கடந்த கால செயல்பாடுகளை முன்னிறுத்தித்தான் எப்போதும் வாக்களித்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் பினாங்கு மாநில அரசாங்கம் ஜசெக-பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி தலைமையிலும், முதலமைச்சர் சௌ கோன் இயோ தலைமைத்துவத்திலும் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் பினாங்கு மாநில மக்கள் – குறிப்பாக பிறை வாக்காளர்கள் – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதே சமயம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் ஒற்றுமை அரசாங்கமும் மத்தியில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அந்த அடிப்படையிலும் பிறை வாக்காளர்கள் பெருமளவில் எனக்கு வாக்களிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என விளக்கினார் சுந்தரராஜூ.

மேலும் எனது கடந்த கால சேவைகள், எனது பிரச்சார அணுகுமுறை ஆகிய காரணங்களாலும் நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கையுடன் கூறுகிறார் அவர்.

“நான் செல்லும் இடங்களில் எல்லாம் சீனர்களும் இந்தியர்களும் எனக்கு அமோகமான ஆதரவு வழங்கி வருகிறார்கள். அதை நான் நன்றாக உணர்கிறேன். இருந்தாலும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறேன். என்னால் இயன்ற வரையில் இரவும் பகலுமாக சுற்றிச் சுழன்று வாக்காளர்களைச் சந்தித்து வருகிறேன். எனவே, வெற்றி பெற முடியும் எனவும் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார் சுந்தரராஜூ.

வெற்றி பெற்றால் அடுத்த துணை முதல்வரா?

அவரை எதிர்த்து நிற்கும் சுயேட்சை வேட்பாளர் முன்னாள் ஜசெக கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனக்கு எதிராக பிரச்சாரம் செய்வது குறித்தும் சுந்தரராஜூ கவலைப்படவில்லை.

“அரசியலில் தனிநபர்கள் பிரபலமாக இருப்பதும் சிறந்த முறையில் சேவையாற்ற முடிவதும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள் – கூட்டணிகள் – அரசாங்கங்களைப் பொறுத்துத்தான். கட்சியின் வலிமையினால்தான் அவர்களும் அரசியல் தலைவர்களாக உருவெடுக்க முடிகிறது. எனவே, வாக்காளர்களும் இதை உணர்ந்தே வாக்களிப்பார்கள்” என வலியுறுத்துகிறார் சுந்தரராஜூ.

பிறை சட்டமன்றத்தில் வெற்றி பெற்றால் பினாங்கு மாநிலத்தில் அடுத்த இரண்டாவது துணை முதல்வராக சுந்தரராஜூவே நியமிக்கப்படுவார் என்ற ஆரூடங்களும் வலுத்து வருகின்றன.

அவர் நேர்காணலில் கூறியபடி, கால நேரம் பார்க்காத அவரின் கடுமையான உழைப்பும், தனக்கு வாய்த்த வாய்ப்புகளை தவறவிட்டு விடாமல் சரியான முறையில் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டதும், அதிர்ஷ்டமும், கடவுளின் அருளும் அவரை சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்தும் – கார் டிரைவர், பாதுகாவலர் போன்ற தொழில்களில் இருந்தும் – வீடமைப்பு நிறுவனம் ஒன்றின் துணைத் தலைமை செயல் அதிகாரி என்னும் உயர் பதவிவரை உயர்த்தியிருக்கிறது.

இப்போது தன் வாழ்க்கையின் அடுத்த கட்டப் பயணமாக அரசியலில் நுழைந்து பிறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகப் போட்டியில் குதித்திருக்கிறார். வெற்றி பெற்றால் காலம் கைப்பிடித்து அடுத்த பினாங்கு துணை முதல்வர் பதவிக்கு அழைத்துச் செல்லுமா?

-இரா.முத்தரசன்

தொடர்புடைய மற்ற பகுதிகள் :

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – ஏழ்மைப் போராட்டத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பின்னணி – பினாங்கு துணை முதல்வர் ஆவாரா? (நேர்காணல் பகுதி – 1)

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – கார் டிரைவராகத் தொடங்கி துணைத் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்த வாழ்க்கைப் பயணம்! (நேர்காணல் பகுதி – 2)