Home நாடு பாகான் டாலாம் : உள்ளூர்க்காரரான குமரன் கிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு

பாகான் டாலாம் : உள்ளூர்க்காரரான குமரன் கிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு

231
0
SHARE
Ad
பாகான் டாலாம் சட்டமன்ற வேட்பாளர் குமரன் கிருஷ்ணன்

பட்டவொர்த் : பினாங்கு மாநிலத்தில் பாகான் டாலாம் தொகுதியில்  போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இந்தியர்கள் என்பது ஒரு சுவாரசியம். இதுபோன்று 4 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தியர்களே போட்டியிடுகிறார்கள்.

பாகான் டாலாம் தொகுதியில் ஜசெக சார்பில் கெல்வின் என்ற குமரன் கிருஷ்ணன் போட்டியிடுகிறார்.உள்ளூர்க்காரரான தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்திருப்பதாக தனது பிரச்சாரத்தின் வழி தெரியவந்திருப்பதாக அவர் செல்லியல் இணைய ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு இடையில் அவரைச் சந்தித்தபோது “நான் உள்ளூரைச் சேர்ந்தவன். பல்லாண்டுகளாக இந்தத் தொகுதியில் மக்கள் பணியாற்றி வந்திருக்கிறேன். பாகான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் எங்கின் இந்திய சமூக பிரதிநிதியாக பணியாற்றும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்ததால் இங்குள்ள மக்களோடு பழகும் வாய்ப்பும் அவர்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அந்த அனுபவங்களைக் கொண்டு பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வெற்றி பெற்றால் என்னால் இந்தத் தொகுதி மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியும் என நம்புகிறேன்” எனவும் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன்
#TamilSchoolmychoice

பாகான் டாலாம் தொகுதியின் தேர்தல் நடவடிக்கை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரனும் இந்தத் தொகுதியில் சுற்றிச் சுழன்று குமரன் கிருஷ்ணனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த தவணை இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்த சதீஸ் முனியாண்டி மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அந்தத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

எனினும் அந்தப் போட்டியைக் கண்டு தான் அஞ்சவில்லை என்றும் குறிப்பிட்ட குமரன் கிருஷ்ணன், வாக்காளர்கள் குறிப்பாக பினாங்கு வாக்காளர்கள் மாநில அரசாங்கத்திற்கும் ஜசெகவிற்கும் ஆதரவாகத்தான் வாக்களிக்கிறார்கள் என்பதால் அவர்களின் ஆதரவு தனக்கே கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

பாகான் டாலாம் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் ஜெயராமன் கே.குஞ்சு கண்ணு போட்டியிடுகிறார். இவர் பாஸ் கட்சியின் இந்தியர் பிரிவைச் சேர்ந்தவராவார். பினாங்கு ஃப்ராண்ட் பார்ட்டி (Penang Front Party) என்ற கட்சியின் சார்பாக ராஜசாகனன் சின்னக் கண்ணு இங்கு போட்டியிடுகிறார்.