Home Photo News டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – கார் டிரைவராகத் தொடங்கி துணைத் தலைமைச் செயல்...

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – கார் டிரைவராகத் தொடங்கி துணைத் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்த வாழ்க்கைப் பயணம்! (நேர்காணல் பகுதி – 2)

481
0
SHARE
Ad

(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் – அனைவரின் பார்வையும் பதிந்திருப்பது பிறை சட்டமன்றத் தொகுதியின் மீதுதான். முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி கடந்த 3 தவணைகளாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. இந்த முறை அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் – தற்போது ஜசெகவிலிருந்தே அவர் விலகியிருப்பதால் – சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதால் -இந்திய வாக்கு வங்கியில் பாதிப்புகள் இருக்குமா? சுயேட்சை வேட்பாளர் – முன்னாள் ஜசெக நகராண்மைக் கழக உறுப்பினர் – டேவிட் மார்ஷல் எத்தனை வாக்குகளைப் பிரிப்பார்? வெற்றி பெற்றால் சுந்தரராஜூ பினாங்கு மாநிலத்தில் இரண்டாவது துணை முதல்வர் ஆவாரா? என்ற கேள்விகள் பினாங்கு முழுவதும் விவாதிக்கப்படுகின்றன. பிறை சட்டமன்றத்திற்காக பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், பரபரப்பான ஒரு நாளில் – சுந்தரராஜூவை அவரின் தேர்தல் நடவடிக்கை அறையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. செல்லியலுடனான நேர்காணலில் – தனது சாதாரண, ஏழ்மையான, வாழ்க்கைப் பின்னணி, இளம் வயதில் ஏழ்மைப் போராட்டம், அதை முறியடிக்க பாதுகாவலர், டாக்சி ஓட்டுநர் போன்ற பணிகளை ஏற்று கடுமையாக உழைத்தது – வணிகத்தில் வெற்றி பெற்றது எப்படி – பிறை சட்டமன்றத்தில் வெற்றி வாய்ப்பு – என்பது குறித்த பல அம்சங்களை செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுடன் பகிர்ந்து கொண்டார் சுந்தரராஜூ. அவருடனான நேர்காணலின் 2-வது பகுதி தொடர்கிறது)

*கார் டிரைவராக வேலை தொடங்கிய நிறுவனத்திலேயே உயர் பதவிகள்!

*கல்வியை விட்டு விடாது தொடர்ந்தவர்!

#TamilSchoolmychoice

*எங்கு சென்றாலும் இந்திய சமூகத்திற்கான நலத் திட்டங்களில் ஈடுபாடு

கார் ஓட்டுநர் – டாக்சி டிரைவர் – என பணி செய்து கொண்டிருந்த சுந்தரராஜூ வணிகத் துறையில் ஈடுபட்டது எப்படி? வெற்றி பெற்றது எப்படி? தொடர்ந்து விவரிக்கிறார்!

“இன்சூரன்ஸ் அட்ஜஸ்டராக வேலை செய்து கொண்டிருந்தபோது பொருளாதார மந்தம் காரணமாக நான் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டேன். வேலையில் நிறுத்தப்பட்டதற்காக 10 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடாக வழங்கப்பட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். அப்போது சிரமமான காலகட்டம். அம்மாவின் பூர்வீகம் கோலசிலாங்கூரில் உள்ள தென்னமரம் தோட்டம். அங்கு சென்று  சிறிதுகாலம் தோட்ட குமாஸ்தாவாக (Field Conductor) வேலை பார்த்தேன். ஆனால் அது ஒத்துவராது, இந்த வேலையைக் கொண்டு வாழ்க்கையில் உயரமுடியாது என உணர்ந்து மீண்டும் கோலாலம்பூர் திரும்பினேன்.”

பாதுகாவல் வேலை வழங்கிய சீக்கியர்

“நண்பர் ஒருவர் டாக்சி ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பற்றிக் குறிப்பிட- டாக்சி ஓட்டத் தொடங்கினேன். டாக்சி ஓட்டியதால் தினம் தோறும் குறிப்பிட்ட வருமானம் கிடைத்தது. டாக்சி ஓட்டிய காலகட்டத்தில் சீக்கியர் ஒருவரை ஒருமுறை பயணியாக அழைத்துச் சென்றேன். அவருடனான உரையாடலில், தான் பாதுகாவல் தொழில் நிறுவனம் நடத்துவதாகவும் (செக்யூரிடி) வேலை தருவதாகவும் உறுதியளித்தார். அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன் – ஒரு நிபந்தனையுடன்! மாலை 5.00 மணிவரை பாதுகாவல் வேலை செய்கிறேன் அதன் பிறகு நான் டாக்சி ஓட்டச் சென்று விடுவேன் என்பதுதான் அது. அப்போது என் தம்பிக்கு பல்கலைக் கழகத்திலும் இடம் கிடைத்துப் படித்து வந்தான். அவன் ஒருவன்தான் எங்கள் வீட்டில் பல்கலைக் கழகம் வரை சென்றவன். துரதிர்ஷ்டவசமாக அவன் இப்போது இல்லை. 2 வேலைகள் செய்ததால் அவனுக்கான செலவினங்களையும் என்னால் சமாளிக்க முடிந்தது. சுமார் 4 ஆண்டுகள் டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்தேன்.”

என்னை வணிகத்தில் உயர்த்திய
லியூ கீ சின்

டான்ஸ்ரீ லியூ கீ சின்

“செக்யூரிடியாக நான் வேலை செய்தபோது என்னை நுழைவாயில் பாதுகாவல் நிலையத்தில்தான் (கார்ட் ஹவுஸ்) நிறுத்தி வைப்பார்கள். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால். அங்கு வருபவர்கள் போகிறவர்களிடம் அறிமுகம் கிடைத்தது. அவ்வாறு அறிமுகம் கிடைத்தவர்தான் டான்ஸ்ரீ லியூ கீ சின் (Liew Kee Sin) எனது முதலாளியாகவும், வழிகாட்டியாகவும் என்னை வாழ்க்கையில் உயர்த்தியவர். அவர் என்னைப் பார்த்து ‘நீ படித்தவனாக இருக்கிறாயே! ஏன் செக்யூரிடி வேலை செய்கிறாய்? எனக்கு டிரைவராக வருகிறாயா’ எனக் கேட்டார். நானும் வருகிறேன் என ஒப்புக் கொண்டேன். ஆனால் மாலை 5 மணி வரையில்தான் வேலை செய்வேன். இரவில் நான் டாக்சி ஓட்ட வேண்டும். அந்த வருமானத்தையும் நான் இழக்க விரும்பவில்லை என்றேன். அவரும் ஒப்புக் கொண்டார். இரவில் நான் அவருக்கு கார் ஓட்ட நேர்ந்தால் தனியாக, கூடுதலாக 50 ரிங்கிட் தந்து விடுவார். டான்ஸ்ரீ லியூ தங்கமான மனிதர். அவரைப் போன்ற மனிதரைக் காண்பது அரிது. அவருடனான டிரைவர் பணி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.”

பிறை சட்டமன்றப் பிரச்சாரத்தின்போது தியோ நீ சிங், பினாங்கு வணிகப் பிரமுகம் டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் ஆகியோருடன்…

“அவர் ஆரம்பத்தில் என்னைப் பார்த்து நீ நன்றாகப் படித்தவன் போல் பேசுகிறாயே! என்ன உன் பின்னணி எனக் கேட்டார். நானும் என் நிலைமையைப் பற்றி எடுத்துக் கூறினேன். அவர் கூறினார் – நீ எந்த சூழ்நிலையிலும் படிப்பை நிறுத்தாதே. அதற்கான பணத்தை நான் தருகிறேன் என்றார்”

“அப்போது இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (Institute of Management) என்ற கல்லூரி பிரபலம். நான் அதில் சேர்ந்து டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் படித்தேன். ஏற்கனவே என்ஜினியரிங் டிப்ளமா வைத்திருந்த நான் இப்போது நிர்வாகத் துறையிலும் டிப்ளமா பெற்றேன். என் கல்வி முடிந்ததும் டான்ஸ்ரீ லியூ, அவரின் ஜூரு பீனா தெனாகா என்னும் நிறுவனத்திலேயே விற்பனைத் துறை முகவராக (Salesman) எனது பேச்சுத் திறமையைப் பார்த்து வேலையைப் போட்டுத் தந்தார். நானும் அந்தப் பணியைச் சிறப்பாக செய்தேன். விற்பனைத் துறை மேலாளர், நிர்வாகி எனப் படிப்படியாக பதவிகளில் உயர்ந்தேன் (Sales Supervisor- Manager). பின்னர் லியூ, எஸ்.பி.செத்தியா என்ற வீடமைப்பு நிறுவனத்தைத் தொடங்கியபோது நான் அதில் சேர்ந்தேன். அந்த நிறுவனத்தை உருவாக்கி, மேம்படுத்திய முக்கிய நான்கு நபர்களில் நானும் ஒருவன். அங்கு 22 ஆண்டுகள் பணிபுரிந்தேன். அந்த நிறுவனத்தில் டிரைவராகப் பணிக்குச் சேர்ந்து நிர்வாகியாக பதவிகளில் உயர்ந்தேன். அந்த நிறுவனத்தில் நான் பங்குதாரர் இல்லையென்றாலும் எனக்கு சில பங்குகளை அளித்திருந்தார்கள். இவ்வாறு என் வாழ்க்கையை திசை மாற்றிய – முன்னேற்றிய – கடவுளாகப் பார்த்து அனுப்பிய இன்னொரு தந்தை (Godfather) – லியூ” என நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்  சுந்தரராஜூ.

வாழ்க்கையில் உயர்ந்தாலும் சமூகத்தை மறக்காத பண்பு

வீடமைப்பு நிறுவனங்களில் பணியாற்றியபோது சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியதாகவும் கூறுகிறார் சுந்தரராஜூ. தனது ஏழ்மை, சாதாரண குடும்பப் பின்னணி – இவற்றின் பிரச்சனைகளை நன்கு உணர்ந்திருந்ததால் தான் சார்ந்திருந்த சமுதாயத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு எப்போதும் இருந்ததாகக் கூறுகிறார்.

குறிப்பாக பூச்சோங் வட்டாரத்தில் தனது நிறுவனம் சம்பந்தப்பட்டிருந்த வீடமைப்புத் திட்டங்களில் பங்கு கொண்டபோது, அங்கு நில மேம்பாட்டில் பாதிக்கப்பட்ட இந்தியர் குடியிருப்புகள் (Squatters), ஆலயங்கள், தமிழ்ப் பள்ளிகள் மறுகுடியேற்றத்தில் தன்னாலியன்ற சேவைகளை வழங்கியதாகவும் சுந்தரராஜூ குறிப்பிடுகிறார்.

பின்னர் ஜோகூர் பாருவில் சில ஆண்டுகள் பணியாற்றியபோது மஇகா ஜோகூர் மாநிலத் தலைவராக இருந்த டத்தோ பாலகிருஷ்ணனுடன் இணைந்து பல சமூகநலத் திட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார் சுந்தரராஜூ.

அங்கிருந்து அவரின் நிறுவனத்திற்கான பினாங்கு மாநில தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். “பினாங்கிலுள்ள ஸ்பைஸ் கொன்வென்ஷன் சென்டர் என்ற மேம்பாட்டுத் திட்டம் நானே வடிவமைத்து நிர்மாணித்த திட்டங்களில் ஒன்றாகும். பினாங்கில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தபோது அங்குள்ள பல இந்திய சமூக இயக்கங்களோடு இணைந்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டேன்” என்கிறார் சுந்தரராஜூ.

பேராசிரியர் இராமசாமியுடன்
இணைந்து பணியாற்றியது…

“நான் பினாங்கு மாநிலத்திற்கு பணிபுரிய வந்தபோது டாக்டர் கோ சூ கூன் முதலமைச்சராக இருந்தார். இரண்டு ஆண்டுகளில் பக்காத்தான் ராக்யாட் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது. பேராசிரியர் இராமசாமி துணை முதலமைச்சரானார். அவருடன் இணைந்து நான் பல சமூக நலப் பணிகளை முன்னெடுத்தேன். தமிழ்ப் பள்ளிகள், இயக்கங்களுக்கு நான் சென்ற போது அவரும் துணை முதல்வர் என்ற முறையில் அந்த நிகழ்ச்சிகளுக்கு வருவார். சமூகநல செயல்பாடுகளுக்கு அவரே எனக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தார். அவர் மீதான மதிப்பும் மரியாதையும் இன்றும் தொடர்கிறது” என்றார் சுந்தரராஜூ.

“இந்தக் கட்டத்தில்தான் எஸ்.பி.செத்தியா நிறுவனத்தை அரசாங்கத்தின் பிஎன்பி நிறுவனம் எடுத்துக் கொண்டது. நாங்கள் சொந்தமாக நிறுவனம் அமைக்க வேண்டும் – தொழில் செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். அவ்வாறு உருவானதுதான் ஈக்கோ வோர்ல்ட் (ECOWORLD) என்னும் நில மேம்பாட்டு, வீடமைப்பு நிறுவனம். இன்று இந்த நிறுவனம் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் அனைத்துலக அளவிலும் செயல்படுகிறது. அங்கு சுமார் 11 ஆண்டுகள் பணிபுரிந்தேன். இன்றைய நிலையில்  இந்தத் துறையில் பெரிய அளவில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற ஒரே இந்தியன் நான் என்பதை பெருமிதத்தோடும், தன்னடக்கத்தோடும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஆகக் கடைசியாக இக்கோவோர்ல்ட் நிறுவனத்தில் வகித்த பதவி துணை தலைமைச் செயல் அதிகாரி (Deputy Chief Executive Officer) என்பதாகும். ஒரு நிறுவனத்தில் கார் டிரைவராகப் பணியாற்றத் தொடங்கி, கல்வியாலும், உழைப்பாலும், முயற்சியாலும், லியூ போன்றவர்களின் ஆதரவாலும் வளர்ந்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தேன்” என தனது வாழ்க்கைப் பயண சாதனைகளைத் தன்னடக்கத்தோடு விவரிக்கிறார்  சுந்தரராஜூ.

அதிலும் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் துறையில் தமிழனான நான் இந்த அளவுக்கு முன்னேறியதற்கும், வளரவிட்டதற்கும் காரணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத என் முதலாளி டான்ஸ்ரீ லியூதான் என நன்றியுடன் நினைவு கூர்கிறார் சுந்தரராஜூ.

“தனது வெற்றிக்குக் காரணம் கடும் உழைப்பு, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டது, டான்ஸ்ரீ லியூ போன்றவர்கள் ஆதரவு என்றாலும் கல்வி நம் வாழ்க்கையில் மிக முக்கியமானது என்பதை நமது சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு துறையில் கல்வி கற்க – ஏதாவது ஒரு தொழிலை – தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நானும் நல்ல வருமானம் கிடைத்த நிலையிலும் மீண்டும் பிரிட்டனின் நோட்டிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து முதுகலை (மாஸ்டர்ஸ்) பட்டம் பெற்றேன்” என்கிறார் சுந்தரராஜூ.

அரசியலில் நுழைவதற்காகவும், பிறை சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவதற்காகவும் இக்கோவோர்ல்ட் நிறுவனத்தில் தான் வகித்த பதவியிலிருந்து விலகிவிட்டார் சுந்தரராஜூ.

அடுத்து: பகுதி 3 (நிறைவு) “ஜசெக அரசியல் நுழைவு – பிறை சட்டமன்றத்தில் போட்டி”

*பிறை சட்டமன்றத்திற்கான வெற்றி வாய்ப்புகள் எப்படி?

*தேர்தல் பிரச்சார அனுபவங்கள் எப்படி?

*பிறை சட்டமன்றத்தில் வெற்றி பெற்றால் அடுத்த துணை முதலமைச்சராவாரா?

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள் :

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – ஏழ்மைப் போராட்டத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பின்னணி – பினாங்கு துணை முதல்வர் ஆவாரா? (நேர்காணல் பகுதி – 1)

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – அரசியல் பிரவேசம் ஏன்? வெற்றி பெற்றால் துணை முதல்வரா? (நேர்காணல் நிறைவுப் பகுதி – 3)