சென்னை – டோர்னியர் விமானத்தின் விபத்தால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ‘ஆப்ரேஷன் ஆம்லா’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை, தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இன்று காலை தொடங்கியது.
இந்த ஒத்திகையை மத்திய அரசின் கடற்படை, கடலோர காவல் படை, மாநில அரசின் கடலோர காவல் குழுமம் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்துகின்றனர்.
கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்குப் பின்னர் நாடு முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ஆண்டிற்கு இரண்டு முறை ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பெயரில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டிற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
இந்த ஒத்திகையின் போது தீவிரவாதிகள் வேடத்தில் சில கடலோரக் காவல்படை வீரர்கள் நாட்டுக்குள் ஊடுருவி வருவார்கள். அவர்களை விழிப்போடு செயல்பட்டு மற்ற கடலோரக் காவல்படை வீரர்களும் காவல்துறையினரும் சுற்றி வளைத்துப் பிடிப்பார்கள். இதுதான் இந்தப் பாதுகாப்பு ஒத்திகையின் செயல்பாடாகும்.
இந்த ஒத்திகை தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.