சென்னை – உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன், அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்புடன் (All India Film Employees Confederation) இணைந்து, வரும் நவம்பர் மாதம் மூன்று நாட்கள், இந்தத் துறையில் ஈடுபட்டிருக்கும் சுமார் 10,000 பேருக்கு சினிமா பயிற்சி வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
வகுப்புகள் நடைபெறும் இடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜி. சிவா இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “சினிமாத்துறையில் பணியாற்ற வருபவர்கள் முன் கற்றல் அங்கீகாரம் (Recognition of Prior Learning) பெற இந்தப் பயிற்சி வகுப்புகள் உதவும். இந்தப் பயிற்சி வகுப்புகளை சினிமாத்துறையில் தேசிய மற்றும் அனைத்துலக அளவில் பிரபலமாக இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் 16 துறைகளில் நிபுணர்களாக இருப்பவர்கள் நடத்தவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சி வகுப்பின் மூலம் 35 திரைப்பட சங்கங்களை ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வர ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் திறன் கழகம் (Media and Entertainment Skills Council) மற்றும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் திறன் கழகத்தின் தலைவராக கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.