புதுடில்லி – இந்தியக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்தியாவின் பழம்பெரும் இதிசாகங்களான ராமாயணம்-மகாபாரதத்தையும், இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையையும் பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இத்தகவலை மத்தியக் கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா வெளியிட்டுள்ளார்.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ பழம்பெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை.
இந்த நூல்களை நமது இளம் தலைமுறையினர் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அப்போதுதான் நமது இந்தியக் கலாசாரப் பெருமைகளை அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். மேலும், பல்வேறு கலாசாரச் சீரழிவுகளால் நம் நாடு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்ற்றைப் படிப்பது அவசியமான ஒன்றாகும்.
ஆகவே, இந்நூல்களைப் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத் திட்டங்களில் சேர்ப்பது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துடன், எங்கள் அமைச்சகம் ஆலோசித்து வருகிறது” என்றார்.
மேலும், “இது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைத் திணிக்கும் முயற்சி அல்ல” என்றும் தெரிவித்தார்.