சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என தமிழகம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆபத்து சமிக்ஞையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.