கோலாலம்பூர் – கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் தமிழ் மொழியை வளர்த்தெடுத்ததில் முக்கியப் பங்காற்றியுள்ள 24 ஆளுமைகள் குறித்து ‘தமிழாற்றுப் படை’ என்ற பெயரில் தனது அழகுத் தமிழில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கும் நூலின் அறிமுக விழா நாளை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மாலை 6.30 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகிறது.
தமிழக ஊடகங்களில் வைரமுத்து எழுதிய இந்தக் கட்டுரைகள் பின்னர், அவராலேயே வாசிக்கப்பட்டு, ஒவ்வொரு ஊரிலும் அரங்கேற்றம் கண்டன. ‘தமிழாற்றுப் படை’ என்ற நூலுடன் அவரது உரையோவியங்களும் ஒலிப் பேழைகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.