Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: மாயா – பயத்தில் அலற வைக்கும் பேய் படம்!

திரைவிமர்சனம்: மாயா – பயத்தில் அலற வைக்கும் பேய் படம்!

1208
0
SHARE
Ad

maxresdefaultகோலாலம்பூர் – அண்மைய காலங்களில் வெளிவந்த பெரும்பாலான பேய் படங்கள் காமெடியை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருந்தன. இதனால் பேய் படம் என்றாலே சிரிக்க மட்டும் தான் என்ற நிலை இருந்து வந்தது.

குழந்தைகளிடம், “வாங்க பேய் படம் பார்க்கலாம்” என்றால், “ஓகே .. வாங்க பார்க்கலாம்.. எப்படியும் சிரிப்பா தான் இருக்கும்” என்று ஹாயாக சொல்லும் அளவிற்கு இந்த தலைமுறையினருக்கு பேய் படங்களின் மீதான பயம் போயிருந்தது. அதற்கு காஞ்சனா, மாஸ், அரண்மனை என பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

இந்த டிரண்டை உடைக்கும் நோக்கில் ‘டிமாண்டி காலனி’ போன்ற சீரியசான பேய் படங்கள் சிலவும் இடையிடையே வந்தன. ஆனால், மக்களிடையே காமெடி பேய் படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை இடையில் வந்த சீரியசான பேய் படங்களால் ஏற்படுத்த முடியவில்லை.

#TamilSchoolmychoice

1980 களில் பேய் படங்களுக்கென ஒரு டிரண்டு இருந்தது. அந்த காலகட்டத்தில் திரையரங்கில் படம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் அலறச் செய்யும் பேய் படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. தனியாளாக திரையரங்கில் படம் பார்ப்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் அளவிற்கு அந்த காலத்தில் வெளிவந்த படங்கள் அத்தனை மிரட்டலாக இருந்தன.

நயன்தாரா, ஆரி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் ‘மாயா’ – அப்படி ஒரு மிரட்டலான பேய் படம் தான்..

திரைக்கதை

ராஜேஷ்குமார் நாவல் படிப்பதைப் போல், படம் தொடங்கியது முதல் இரண்டு வெவ்வேறு கதைகளுடன் வெவ்வேறு பாதையில் பயணிக்கிறது.

கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரைப் பிரியும் நயன்தாரா தனது 1 வயது கைக்குழந்தையுடன் தோழி லஷ்மி பிரியாவின் வீட்டில் தங்கியிருக்கிறார். மாத செலவுகளுக்கு மிகவும் கஷ்டப்படும் நயன், சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி அலைகிறார்.

நடித்துக் கொடுத்த படம் ஒன்றிற்கு சம்பளமாக தயாரிப்பாளர் கொடுத்த செக், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வருகிறது. அந்த சமயத்தில் கடன்காரர்கள் நெருக்கடி கொடுக்க காசு தேடி அலையும் நயன் என்ன முடிவெடுக்கிறார்? என்பது ஒரு கதை.

‘வெளிச்சம்’ பத்திரிக்கையில் பேய் படங்களுக்கு கார்டூன் வரைபவர் ஆரி. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட பேய் தொடர்கதை ஒன்றிற்கு கார்டூன் வரைகிறார்.

அந்தக் கதை பற்றி முழுமையாக அறியும் ஆரி, அதை நம்பாமல் விளையாட்டாக தனது நண்பர் ஒருவரிடம் கூறுகிறார். அதன் பின்னர் தொடர்ச்சியாக அசம்பாவிதங்கள் நடக்கின்றன. உண்மையைக் கண்டறியும் நோக்கத்தில் அந்தத் தொடர்கதையில் வரும் பேயைத் தேடி காட்டுக்குள் செல்லும் ஆரிக்கு நேர்வது என்ன? இது இரண்டாவது கதை.

இந்த இரண்டு கதைகளையும் இணைக்கிறது ‘மாயவனம்’. அந்தக் காலத்தில் மாயவனம் என்ற பகுதியில் ஏற்பட்ட சில அசம்பாவித சம்பவங்களும், அதனால் அந்தப் பகுதியில் ஏற்படும் தொடர்ச்சியான மரணங்களும் தான் படத்தின் பிளாஷ்பேக்.

படத்தில் ஆரம்பத்தில் இருந்து போடப்பட்டு வந்த கேள்வி முடிச்சுகளை எல்லாம் மாயவனத்தில் நடக்கும் கிளைமாக்சில் கட்டவிழ்க்கிறார் இயக்குநர். படத்தில் கடைசியாக வைத்த டிவிட்ஸ் அருமை..

அஸ்வின் சரவணன் என்ற புதுமுக இயக்குநர் படத்தை இயக்கியிருக்கிறார். எப்படி நயன்தாராவிடம் கால்ஷீட் வாங்கினார் என்று தெரியவில்லை. இருந்தாலும் நயன்தாராவை மையப்படுத்தி படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது.

நயன்தாரா கதாப்பாத்திரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால், படத்திற்கு இத்தனை வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறி தான்.

நடிப்பு

maya

‘மாயா’ கதாப்பாத்திரத்தில் நயன்தாரா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நயன்தாரா ரசிகர்களுக்கு மட்டும் ஒரு ஏமாற்றம் இருக்கும். காரணம் படத்தில் ஒரு இடத்தில் கூட அவரின் அழகான சிரிப்பைப் பார்க்க முடியாது. தனது கதாப்பாத்திரத்திற்குத் தகுந்தவாறு முகத்தில் எப்போதும் ஒருவித சோகம் படர இயல்பாக நடித்திருக்கிறார்.

கார்டூனிஸ்டாக ஆரி.. நெடுஞ்சாலை படத்தில் பார்த்த ஆரிக்கும், இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஆரிக்கும் அவ்வளவு வேறுபாடுகள். மார்டன் இளைஞராக வருகிறார். என்றாலும் நடிப்பிலும், முகபாவனைகளிலும், வசனத்திலும் நடிகர் சூர்யாவின் சாயல் தெரிகிறது.

இவர்களைத் தவிர லஷ்மி பிரியா, மைம் கோபி, ரோபோ ஷங்கர் போன்றவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, இசை

சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், ரோன் யோஹன் இசையும் படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளது. நயன்தாரா காட்சிகளை கலரிலும், ஆரியின் காட்சிகளை கருப்பு வெள்ளையிலும் காட்டி வித்தியாசம் ஏற்படுத்தியிருக்கும் உத்தி பாராட்டும் வகையில் உள்ளது.

மாயவனம் சுடுகாட்டு காட்சிகள் நிஜமாகவே அங்கு செல்வதைப் போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றன.

தேவையான காட்சிகளில் மட்டும் பின்னணி இசை கொடுத்து மற்ற இடங்களில் ஒருவித அமைதியை ஏற்படுத்தியிருக்கிறார் ரோன் யோஹன். உண்மையில் அது தான் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுதவிர, படத்தில் இடையிடையே வரும் சிறுசிறு பாடல்களும் அருமை.

மொத்தத்தில், மாயா – ஹாயாக திரையரங்கில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டே பார்க்கும் பேய் படம் இல்லைங்க.. வித்தியாசமான கதையுடன் கூடிய மிரட்டலான பேய் படம் என்பதை மறந்திடாதீங்க..

-ஃபீனிக்ஸ்தாசன்