Home Featured நாடு “தாய்மொழி வகுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பை மஇகா கடுமையாக எதிர்க்கிறது” – சுப்ரா அறிவிப்பு

“தாய்மொழி வகுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பை மஇகா கடுமையாக எதிர்க்கிறது” – சுப்ரா அறிவிப்பு

911
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTகோலாலம்பூர் – அரசாங்கத்தின் சிக்கனத் தன்மைக்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக பள்ளிகளில், பிஓஎல் எனப்படும் தாய்மொழி வகுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும் என்ற கல்வி அமைச்சின் அறிவிப்பு ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதனை மஇகா கடுமையாக எதிர்க்கும் என்றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

“நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான பொருளாதாரச் சூழலை நாங்கள் நன்கு அறிந்திருக்கின்றோம். அரசாங்கச் செலவினங்களில் சிக்கனத் தன்மை கடைப்பிடிக்கப்படுவதும், அவசியமில்லாத செலவுகளைத் தவிர்ப்பதும், கட்டுப்படுத்துவதும்  இந்த காலகட்டத்தில் அத்தியாவசியமானது என்பதை நாங்களும் உணர்ந்திருக்கின்றோம். அப்படிச் செய்வதன் மூலம்தான் பொருளாதார நெருக்கடிகளை அரசாங்கம் சமாளிக்க முடியும் என்பதையும் நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். ஆனால் அதற்காக, தாய்மொழி வகுப்புகளுக்கான ஆதரவையும், நிதி ஒதுக்கீட்டையும் கல்வி அமைச்சு குறைத்துக் கொள்ளும் என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று” என்றும் சுப்ரா இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் வலியுறுத்தினார்.

“மலேசியர்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான விவகாரமான தாய்மொழி வகுப்புகள் மீதான நிதி ஒதுக்கீட்டு குறைப்பு அனைத்து மலேசியர்களிடையே, அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது” என்றும் சுப்ரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கல்வி அமைச்சின் சிக்கன நடவடிக்கைகள் என்பது வரவேற்கப்படக் கூடியதுதான் என்றாலும், அதனால், தாய்மொழி வகுப்புகள் சுமுகமாக நடைபெறுவது எந்தவிதத்திலும் தடைப்படக் கூடாது என்பதையும் மாணவர்கள் இந்த வகுப்புகளில் பங்கு பெறுவது எந்தவிதத்திலும் பாதிப்படையக்கூடாது என்பதையும் கல்வி அமைச்சு உறுதி செய்ய வேண்டும் என்றும் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

“மாறாக, தாய்மொழி வகுப்புகளின் தற்போதைய உண்மையான நிலவரம் என்னவென்றால், இந்த தாய்மொழி வகுப்புத் திட்டத்தை செம்மையாகச் செயல்படுத்த, பல பள்ளிகளில் முழு நேர தாய்மொழி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றார்கள் என்பதுதான். இத்தகைய சூழ்நிலையில், மேலும் நிதிக்குறைப்பு என்பது, இந்தத் திட்டத்தின் செயல்பாட்டை மேலும் மோசமாக்கும் என்பது மிகவும் அக்கறைக்குரிய, கவலைக்குரிய ஒரு விவகாரமாகும்” என்றும் சுப்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

“மலேசியர்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான தாய்மொழி விவகாரத்தில் கல்வி அமைச்சு உண்மையான நிலவரங்களை உணர்ந்து, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை கல்வி அமைச்சு ஆராய வேண்டுமே ஒழிய, இந்தத் திட்டம் பாதிப்படையும் வகையில் நிதிக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. மக்களின் உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட தாய்மொழி வகுப்புகள் குறித்து பாதகமான முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கின்றேன்” என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார் சுப்ரா.