மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அமைந்துள்ள பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் நடந்த முறைகேடு தொடர்பாக சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவரிடம் பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் ஓட்டுநராகப் பணி புரிந்த சேவற்கொடியோன் என்பவர், குவாரியில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து நரபலி கொடுத்து அருகிலுள்ள இடுகாட்டில் புதைத்துவிட்டதாகப் புகார் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து அவர் குறிப்பிட்ட இடத்தில் தோண்டிப் பார்த்த போது 8 பேருடைய எலும்புக் கூடுகள் கிடைத்தன.
ஆகையால்இது தொடர்பாக விசாரணை செய்ய பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, பரமசிவன் ஆகியோருக்குக் கீழவளவு போலீசார் சம்மன் அனுப்பினர். அவர்கள் கடந்த 15, 16 மற்றும் 17–ஆம் தேதிகளில் காவல் நிலையத்தில் ஆஜரானார்கள்.
நரபலி புகார் கூறிய சேவற்கொடியோனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர் 22–ஆம் தேதி காவல்நிலையம் வந்து நரபலி தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் பி.ஆர்.பி. நிறுவனங்களில் வேலை பார்த்த லோகேஷ், முருகேசன், ராஜா, தனபால், ஹனுமந்தன், பழனிவேல், முருகானந்தம் ஆகிய 7 பேருக்கும் நவம்பர் 22–ஆம் தேதி விசாரணைக்கு நேரில் வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.