மதுரை – நரபலி புகாரைத் தொடர்ந்து கிரானைட் குவாரியில் தோண்டிய இடத்தில் கிடைத்த 8 எலும்புக் கூடுகளில் கடைசியாக எடுக்கப்பட்ட 2 எலும்புக்கூடுகள் நரபலி கொடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் நம்பப்படுவதால் கிரானைட் குவாரி விசாரணை சூடு பிடித்துள்ளது.
பிஆர்பி நிறுவனத்திற்குச் சொந்தமான கிரானைட் குவாரியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கடத்திக் கொண்டு வந்து நரபலி கொடுத்துப் புதைத்து விட்டதாகச் சேவற்கொடியோன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 13 ஆம் தேதி, கிரானைட் முறைகேடு விசாரணை அதிகாரி சகாயம் முன்னிலையில் தோண்டப்பட்டதில், 4 உடல்களின் எலும்புக்கூடுகள் சிக்கின.
அவை அந்த ஊரைச் சேர்ந்தவர்களின் எலும்புக் கூடுகள் என்றும், அவர்கள் நோய் முதலான காரணங்களால் இறந்து போய் ஊராரால் புதைக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் என்பது தெரித வந்தது.
எனினும், நரபலி கொடுத்துவிட்டு பிணத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் ஆழமாகக் குழி தோண்டி புதைத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பிய சகாயம் 10 அடிக்கு மேல் தோண்டிப் பார்க்க உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் 12 அடி ஆழம் வரை தோண்டும் பணி கடந்த 18-ஆம் தேதி துவங்கி நேற்று வரை நடைபெற்றது. அதில் மேலும் 4 எலும்புக்கூடுகள் கிடைத்தன.
நேற்று கிடைத்த 7 மற்றும் 8-ஆவது எலும்புக்கூடுகள் முகம் மண்ணில் புதைந்தும், தாடை எலும்பு தொங்கியவாறும், முகம் மேற்கு நோக்கியும் இருந்தன. அவ்வூரில் இறந்தவர்களின் தலையைத் தெற்கு நோக்கி வைத்துப் புதைப்பது வழக்கம்.
எனவே, இவை நரபலி கொடுக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடாக இருக்கும் எனச் சந்தேகம் வலுத்துள்ளது.
அனைத்து எலும்புக்கூடுகளும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
தடயவியல் முடிவை வைத்தே தங்களது விசாரணையை மேற்கொண்டு தொடர முடியும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கிரானைட் முறைகேடு அறிக்கை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சகாயம் தனது குழுவிலுள்ள அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்துகிறார்.நரபலி உண்மை என்று நிரூபணம் ஆகும் பட்சத்தில் முறைகேடு அறிக்கையுடன் நரபலி கொடுக்கப்பட்ட குற்றமும் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.