கோலாலம்பூர் – வழக்கமாக மஇகா மற்றும் சில அரசியல் கட்சிகளின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளுக்கு மட்டும் வருகை தரும் பிரதமர் நஜிப் துன் ரசாக், இந்த ஒரு வித்தியாச அணுகுமுறையாக, சமூக இயக்கங்களின் வழி தீவிர சமூக சேவையில் ஈடுபட்டு வரும் திருமதி இலட்சுமியின் இல்லத்திற்கு வருகை தந்து அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து சொன்னார்.
தனது வருகை குறித்து நட்பு ஊடகங்களில் தெரிவித்த பிரதமர் நஜிப், கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னால் தனது கணவனை இழந்த, திருமதி இலட்சுமி அரசாங்க உதவியுடன் தனது பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து சிறந்த குடும்பத் தலைவிக்கான இலக்கணமாகத் திகழ்கின்றார் என்று புகழ்ந்துரைத்தார்.
அதோடு, தான் வளர்ச்சியடைந்ததோடு நில்லாமல், சமூக இயக்கங்களின் வழி மற்ற பெண்மணிகளின் குடும்பத்தினருக்கும் அரசாங்க உதவிகள் முறைப்படி சென்று சேர இலட்சுமி பாடுபடுவதற்கும், ஆலோசனைகள் வழங்குவதற்கும் நஜிப் அவருக்குப் பாராட்டு தெரிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டிற்கு தான் வருகை தந்ததாகவும் பிரதமர் தனது டுவிட்டர், பேஸ்புக் வலைத் தளங்களில் தெரிவித்திருந்தார்.
இலட்சுமியின் சமூகப் பங்களிப்பைத் தான் பெரிதும் மதிப்பதாகவும், தான் பெற்ற அரசாங்க உதவிகளுக்குப் பதிலாக சமூகத்தில் அரசாங்க உதவிகள் தேவைப்படும் மற்ற பெண்களின் குடும்பத்திற்கு ஆலோசனைகளும், உதவிகளும் வழங்க முன்வந்திருக்கும் இலட்சுமியின் அர்ப்பண உணர்வை மதித்தே, அவருக்கு இல்லத்திற்கு வருகை தர, தான் முடிவு செய்ததாகவும் நஜிப் தெரிவித்துள்ளார்.
-செல்லியல் தொகுப்பு