Home Featured நாடு வி.கே.லிங்கம் வழக்கறிஞர் தொழில் புரிவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்!

வி.கே.லிங்கம் வழக்கறிஞர் தொழில் புரிவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்!

924
0
SHARE
Ad

Lingam V.K.கோலாலம்பூர் – மலேசிய நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் பின்னணியில் இருந்து செயல்பட்டார் போன்ற சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த டத்தோ வி.கே.லிங்கம் (படம்) வழக்கறிஞர் தொழில் புரிவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் அறிவித்திருக்கின்றது. அதன் தலைவர் ஸ்டீவன் திரு இந்த அறிவிப்பைச் செய்திருக்கின்றார்.

கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதல் வி.கே.லிங்கம் மலேசிய வழக்கறிஞர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஸ்டீவன் திரு உறுதிப்படுத்தியுள்ளார்.

லிங்கத்திற்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பெற்ற புகார்களை விசாரித்த பின்னர் அந்தக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக லிங்கத்தின் வழக்கறிஞர் ஆர்.தயாளன் தெரிவித்ததாக மலேசியாகினி இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இருப்பினும் வழக்கறிஞர் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முடிவுக்கு எதிராக லிங்கம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்றும் தயாளன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த ஆண்டின் இறுதிலேயே தனது வழக்கறிஞர் நிறுவனத்தை மூடி விட்டு, வழக்கறிஞர் தொழிலிலிருந்து லிங்கம் ஒதுங்கிக் கொண்டார் என்றும் அவரது வழக்கறிஞர் தயாளன் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் நியமனம் குறித்த காணொளி

கிளானா ஜெயா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லோ குவோ பர்ன், கடந்த 2001ஆம் ஆண்டில் தொலைபேசியில் லிங்கம், முன்னாள் தலைமை நீதிபதி துன் அகமட் ஃபைருஸ் ஷேக் அப்துல் ஹாலிமுடன் பேசிக் கொண்டிருக்கும் காணொளி ஒன்றை வெளியிட்டார். பின்னர் அந்தக் காணொளி 2007ஆம் ஆண்டில் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

நீதிபதிகளின் பதவி உயர்வு குறித்த லிங்கத்தின் உரையாடல் அந்தக் காணொளியில் இடம் பெற்றிருந்தது.

அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் நாட்டையே உலுக்கியதோடு, 2008 பொதுத் தேர்தல் பிரச்சாரங்களிலும் முக்கிய அங்கம் வகித்தன.

2007இல் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அரச விசாரணை ஆணையம் ஒன்று நியமிக்கப்பட்டு, 2008இல் அதன் அறிக்கை வெளியிடப்பட்டது.

அரச விசாரணை ஆணையம் லிங்கம் மீதும், நீதிபதி அகமட் ஃபைருஸ், முன்னாள் பிரதமர் துன் மகாதீர் உட்பட நால்வர் மீது நடவடிக்கை எடுக்கப்பட சிபாரிசு செய்திருந்தது. எனினும், பின்னர் இந்த அரச ஆணைய முடிவுகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு கூட்டரசு மேல் முறையீட்டு நீதிமன்றம் வரை வழக்கு நீடித்தது.

இந்த சர்ச்சைகளின் தொடர்பில் மலேசிய வழக்கறிஞர் மன்றம் செய்த புகார்களின் அடிப்படையில்தான் லிங்கம் வழக்கறிஞர் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் வழக்கறிஞர் தொழில் புரிவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.