சென்னை – சென்னை கிண்டி பகுதி மழை வெள்ளத்தால் தனித்தீவாக்கப்பட்ட நிலையில், நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரை, வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட காணொளி தற்போது இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. மிகவும் குறைந்த உயரத்தில் அந்த பெண்ணின் அருகில் சென்று, அவர் ஏறும் வரை ஹெலிக்காப்டரை சமநிலைப்படுத்திய விமானியின் சாகசம் காண்போரை சிலிர்க்க வைக்கிறது.
நிறைமாத கர்ப்பிணியான சுகன்யாவின் குடியிருப்புப் பகுதியில் 2-வது மாடி வரை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். மழை வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக 4-வது மாடிக்கு சென்றனர்.
உடன் இருந்தவர்கள் சுகன்யாவை மட்டுமாவது மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என எண்ணி, மீட்புக் குழுவினருக்கு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து ‘சேட்டக்’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் சென்ற வீரர்கள் சுகன்யாவை மீட்டு தாம்பரம் விமானப்படை தளத்துக்கு பத்திரமாக கொண்டு போய் சேர்த்தனர்.
மிகக் குறுகிய பகுதியில், குறைந்த உயரத்தில் ஹெலிக்காப்டரை கட்டுக்கோப்பாக சமநிலைபடுத்தி கர்ப்பிணிப் பெண்ணை மீட்ட விமானப் படையினரின் சாகசம் அனைவரையும் நெகிழ்ச்சியுறச் செய்தது.