Home Featured தமிழ் நாடு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நாஞ்சில் சம்பத் நீக்கம்!

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நாஞ்சில் சம்பத் நீக்கம்!

892
0
SHARE
Ad

சென்னை – அ.தி.மு.க. வில் கொள்கை பரப்பு துணை செயலாளராக கம்பீரமாக வலம் வந்து கொண்டிருந்த நாஞ்சில் சம்பத்  திடீரென அந்தப் பதவியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் முக்கிய பிரச்சார பீரங்கியாகத் திகழ்ந்த அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Nanjil Sampathநேற்று சம்பத்துடனான நேருக்கு நேர் சந்திப்புகளாக, இரண்டு வெவ்வேறு பேட்டிகள் தந்தி தொலைக்காட்சி, நியூஸ்7, ஆகிய அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்தப் பேட்டிகளில் அவர் தெரிவித்த சில கருத்துகளால்தான் அவர் நீக்கப்பட்டுள்ளார் எனக் கருதப்படுகின்றது.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தின் போது, வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பதாகைகள், பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் ஆகியவை வைக்கப்பட்டது தவறில்லை என்பது போன்ற அவரது பேச்சுகள்தான் அவரது நீக்கத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகின்றது.

நாஞ்சில் சம்பத் பின்னணி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மதிமுகவில் வைகோவுக்கு அடுத்த தலைவராகவும், அவரது கேடயமாகவும், மேடைகளில் மதிமுக சார்பாக முழங்குகின்ற முக்கியப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர் சம்பத்.

பின்னர், வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், ம.தி.மு.க.வில் இருந்து விலகிய சம்பத் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். உடனடியாக அவருக்கு அ.தி.மு.க. வில் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது என்பதோடு கட்சியின் கொள்கைகளை மக்களிடம் பரப்புவதற்கு வசதியாக புதிய கார் ஒன்றையும் ஜெயலலிதா வழங்கினார்.

சம்பத்தின் நீக்கம் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் “அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் நாஞ்சில் சம்பத் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று மட்டுமே கூறியுள்ளதோடு, வேறு எந்தக் காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை.

இருப்பினும் சம்பத்தின் நேற்றைய தொலைக்காட்சிப் பேட்டிகள்தான் அவரது நீக்கத்திற்குக் காரணம் என தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.