கோலாலம்பூர் – 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அம்னோவை வெற்றியடையச் செய்யவே 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி அளிக்கப்பட்டது என பிரதமர் நஜிப் துன் ரசாக்கே வெளிப்படையாக அறிவித்துவிட்ட போது, அந்நிதி ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராகப் போராடுவதற்காக வழங்கப்பட்டது என்று சில தரப்பினர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முக்மட் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தேர்தலில் வெற்றியடைய அவ்வளவு பெரிய அளவிலான நிதி தேவையில்லை என்றும் அவர் இன்று தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சவுதி அரேபியா இதற்கு முன்பு பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரிய அளவிலான நிதியளித்தது தெரிந்த கதை தான் என்றாலும், அதெல்லாம் இரண்டு அரசாங்கங்களுக்கு நடுவில் வெளிப்படையான முறையில் நடைபெற்றது. இப்படி இரகசியமாக யாருக்கும் அன்பளிப்பாக இவ்வளவு பெரிய நிதியை அளிக்கவில்லை என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், சுவிஸ் சட்டத்தை மீறி 4 பில்லியன் அமெரிக்க டாலர் மலேசியாவிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்தது 1எம்டிபி பணமா? இல்லையா? என்பதை சுவிஸ் ஏஜி கண்டுபிடித்திடாத வகையில் மலேசிய ஏஜி (தலைமை வழக்கறிஞர் மன்றம்) மறைக்க முயற்சி செய்கிறது என்றும் மகாதீர் குற்றம் சாட்டியுள்ளார்.