Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: மிருதன் – வலிய திணிக்கப்பட்ட ஹீரோயிசத்துடன் தமிழ் சினிமாவின் இரண்டாவது ஸோம்பி!

திரைவிமர்சனம்: மிருதன் – வலிய திணிக்கப்பட்ட ஹீரோயிசத்துடன் தமிழ் சினிமாவின் இரண்டாவது ஸோம்பி!

945
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், ஜெயம்ரவி, லஷ்மி மேனன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மிருதன்’ திரைப்படத்தின் விமர்சனத்திற்குச் செல்வதற்கு முன், ‘தமிழ் சினிமாவின் முதல் ஸோம்பி’ திரைப்படம் என்று அதற்கு கூறப்படும் அடையாளத்தை மறுத்து விளக்கம் கொடுக்கும் நிலையில் உள்ளோம்.

உலக அளவில் தமிழ் சினிமாவின் முதல் ஸோம்பி (Zombie) திரைப்படம், கடந்த ஆண்டு ஜூலை மாதமே மலேசியாவில் பிரேம்நாத் இயக்கத்தில், ‘வேற வழி இல்ல’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்துவிட்டது. அதற்கான முழு விளக்கத்தையும் http://www.selliyal.com/archives/117533 இந்த இணைப்பில் சென்று காணலாம்.

Zombeசரி.. ஸோம்பி என்பது என்ன? மாயமந்திரங்களாலோ அல்லது கிருமிகளாலோ உருவாகும் ஒரு வித தீய சக்தி. மனித சதைகளை வேட்டையாடும் ஒரு கொடூர அமானுஷ்யம் என்கின்றன ஸாம்பி பற்றிய ஆங்கிலப் புத்தகங்களும், படங்களும்.

#TamilSchoolmychoice

இந்த கதைக்கரு தமிழுக்குத் தான் புதியதே தவிர, ஆங்கிலப் படங்களில் காலங்காலமாக சொல்லப்பட்டு வருபவை தான். கிட்டத்தட்ட 1932-ம் ஆண்டு முதல் இது போன்ற கதையம்சம் கொண்ட ஸோம்பி படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதன் தொழில்நுட்பம் மற்றும் பிரம்மாண்டத்தை நாம் இப்போது தான் மெல்ல நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

மிருதன் கதைச் சுருக்கம்

ஊட்டியில் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய ரசாயனம் வீதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கலக்க அதை நாய் ஒன்று குடிக்கிறது. இதனால் அது ஸோம்பியாக மாறி மனிதனைக் கடிக்க, அவன் ஸாம்பியாக மாறி இன்னொருவரைக் கடிக்க இப்படியாக ஒரே நாளில் ஊட்டி முழுவதும் பல ஸோம்பிக்கள் பெருகிவிடுகின்றன.

தனது தங்கை அனிகா, நண்பன் காளி வெங்கட் இவர்கள் தான் உலகம் என்று வாழ்ந்து வரும் டிராபிக் போலீஸ் ஜெயம்ரவிக்கு, அந்த ஊரில் டாக்டரான லஷ்மி மேனன் மீது காதல் வருகிறது. அந்த சமயம், ஊரில் ஸோம்பிக்கள் பெருகி அவசரப் பிரகடனம் செய்யப்படுகின்றது.

அதன் பின்னர், அந்த ஸோம்பிக்களை ஒழிக்க டாக்டரான லஷ்மி மேனன் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், அதற்குப் பக்கபலமாக ஜெயம்ரவி சேர்ந்து கொள்வதும் தான் மீதிக் கதை. கிளைமாக்சில் வலிய திணிக்கப்பட்ட ஒரு டுவிட்ஸ்ட்.

நடிப்பு

Miruthanதனி ஒருவன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஜெயம்ரவி இந்தப் படத்தில் அதற்காக உழைத்திருக்கிறார். தங்கை மீது பாசம், நண்பன் மீது கரிசனம், பிரச்சனையைக் கண்டு ஒதுங்கும் குணம் என்று ஆரம்பத்தில் அடக்கம் காட்டும் ஜெயம்ரவி, இரண்டாம் பாதியில் ஹீரோ அவதாரம் எடுக்கிறார்.

நடிப்பில் செயற்கைத்தனம் இல்லை. சோகம், சந்தோஷம், கண்ணீர் என அனைத்து முகபாவனைகளையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். “நீங்கல்லாம் யாரும் வரக்கூடாது.. உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. நாங்க போறோம்” என்று தங்கையை அள்ளிக் கொண்டு போகும் இடங்களில் ஜெயம்ரவியின் நடிப்பு உண்மையில் சூப்பர்.

லஷ்மி மேனன் டாக்டராக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ஜெயம்ரவி மீது நன்றாக வெறுப்பை உமிழ்கிறார். மற்றபடி அவர் நடிப்பதற்கான காட்சிகள் குறைவு.

இவர்களோடு, காளி வெங்கட் காமெடி மிகவும் ரசிக்க வைக்கின்றது. “மாப்ள, காலுல பல்லு பதிஞ்சிருந்தா சுட்டுறாத டா.. வலிக்காம சாவுற மாதிரி ஊசி எதுனா போட சொல்லுடா..” என்று சென்டிமெண்டிலும் கலக்குகிறார். சில காட்சிகளில் வந்தாலும் ஸ்ரீமன் ரசிக்க வைக்கின்றார்.

மற்றபடி, ஸோம்பிக்களின் நடிப்பும், ஒப்பனையும் மிரட்டலாக இருந்தாலும், அந்தக் காட்சிகளின் வீரியம் குறைவாக இருப்பதால் நம்மை பயமுறுத்தவே இல்லை.

சொதப்பல்கள் 

ஆங்கிலப் படத்தின் பாணியில் எடுத்திருப்பதால், லாஜிக்கே வேண்டாம் என்று இயக்குநர் முடிவெடுத்துவிட்டார் போலும். பல இடங்களில் ‘லாஜிக்’ ஸோம்பியை விட கொடூரமாகக் கடிக்கிறது.

miruthan-450x270பொதுமக்களை எல்லாம் வெறித்தனமாக வேட்டையாடும் ஸோம்பி, ஹீரோவை நெருங்கும் போது மட்டுமே ஏதோ மல்யுத்தப் போட்டியில் விதிமுறைகளைப் பின்பற்றுவது போல் ஹீரோ தாக்கும் வரை தயாராக நிற்கிறது. மற்ற நேரங்களில் பூச்சாண்டி காட்டுகிறது.

அதுவரை, ஸோம்பிக்களிடமிருந்து தப்பிக்க நீச்சல் குளத்தில் போராடிக் கொண்டிருந்த சிறுமி, காப்பாற்றப்பட்ட அடுத்த நொடி, “கார்த்திக் இது உன் பர்ஸ்ல போட்டோ வச்சிருந்தியே அந்த ஆண்டி தான?” என்று ஜெயம் ரவியிடம் கேட்பதெல்லாம் அக்மார்க் தமிழ் சினிமா திணிப்புகள்.

ஒரு டெம்போ வேனை ஈ மொய்ப்பது போல் தொங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஸோம்பிக்களை, அழித்த ஹீரோ, தீயணைப்பு வாகனத்தைப் பயன்படுத்தி லஷ்மி மேனனை காப்பாற்றியிருக்கலாமே? பின் ஏன் அப்படி ஒரு முடிவெடுக்கிறார்? இதெல்லாம் வலியத் திணிக்கப்பட்ட ஹீரோயிசமாகவே தெரிகின்றது.

ஸோம்பி ஆன பின்னரும் காதல் பிளாஷ்பேக்.. ரொம்பவே மிகையாகத் தெரிகின்றது.

பாராட்டப்பட வேண்டிய இடங்கள்:

நூற்றுக்கணக்கான ஸோம்பிக்களை ஒரே இடத்தில் குவித்து அதைக் காட்சிப்படுத்தியதில் இருக்கும் பிரம்மாண்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ், மேக்கப், படத்தொகுப்பு ஆகியவை கையாளப்பட்டிருக்கும் விதம் அழகு.

வெங்கடேஷ் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பக்கபலம் சேர்த்துள்ளன.

Miruthan-Movie-Songs-696x465டி.இமான் இசையில் முன்னாள் காதலி பாடலும், அதன் வரிகளும் ரசிக்க வைக்கின்றது.

மொத்தத்தில், உலக அளவில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய களத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ‘மிருதன்’ திரைப்படம் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

என்றாலும், மலேசியாவில் கடந்த ஆண்டு வெளிவந்த தமிழின் முதல் ஸோம்பி திரைப்படமான ‘வேற வழி இல்ல’ பார்த்தவர்களுக்கு, ‘மிருதன்’ பிரம்மாண்டமான படைப்பாக மட்டுமே தெரியும்.

காரணம், மிருதன் திரைப்படத்தில் இருக்கும் அத்தனை அம்சங்களையும் குறைந்த பட்ஜத்தில் மிகச் சிறப்பாக அளித்திருப்பார் மலேசிய இயக்குநர் பிரேம்நாத்.

– ஃபீனிக்ஸ்தாசன்