கோலாலம்பூர் – பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படம், மலேசியாவில் தனது பெரும்பான்மையான படப்பிடிப்பு வேலைகளை நிறைவு செய்துவிட்டது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகளில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி மலேசியாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
மலேசியாவை கதைக் கருவாகக் கொண்ட கபாலி திரைப்படத்தில், பாடகர் டார்க்கி உட்பட நிறைய மலேசியக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், மலேசியாவில் ரஜினிக்கு இந்தியர்களோடு, மலாய்காரர்கள், சீனர்கள் என பல்லின மக்களும் ரசிகர்களாக இருப்பதால், அத்திரைப்படத்தை மலாய் மொழியிலும் மொழி பெயர்க்க முடிவு செய்துள்ள கபாலி திரைப்படக் குழு அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. (கபாலி பேஸ்புக்)
முதற்கட்டப் பணிகளாக தமிழில் அதன் குரல் பதிவு பணிகளைத் தொடங்கியிருக்கும் கபாலி தயாரிப்பு குழு, அடுத்து மலாய் மொழியில் குரல் பதிவிற்கான பணிகளைத் துவங்கும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், ரஜினிக்கு மலாய் மொழியில் பின்னணி குரலை கொடுக்கப் போகும் மலேசியக் கலைஞர் யார் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவத் தொடங்கியுள்ளது.
கபாலி தமிழ்ப் படம் என்பதால், அதன் வசனங்களை தெளிவாக உள்வாங்கி, புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் மலாயில் பேசத் தெரிந்த கலைஞரால் மட்டுமே அந்தப் பணியை சிறப்பாகச் செய்ய இயலும்.
அப்படியானால், நிச்சயமாக மலேசியாவில் தமிழையும், மலாய் மொழியையும் தெளிவாகப் பேசத் தெரிந்த ஒரு கலைஞருக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கப் போகிறது.
இதற்கு முன்பு, ரஜினி நடித்த தமிழ்ப் படங்கள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட போது, அதில் ரஜினிக்கு மயூர் வியாஸ் என்ற டப்பிங் கலைஞர் தான் குரல் கொடுத்துள்ளார்.
அதே போல், தெலுங்கில் ரஜினியின் பெரும்பான்மையான திரைப்படங்களில் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் வேறு யாரும் அல்ல பாடகர் மனோ தான். ரஜினியின் குரலுடன் ஒத்துப் போகும் வகையில் அவரது பின்னணி குரல் அமைந்ததால், அவருக்கே தொடர்ந்து வாய்ப்புகளை அளித்தனர் தயாரிப்பாளர்கள்.
ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘தளபதி’ மலையாளத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட போது அவருக்குப் பின்னணி குரல் கொடுத்தவர் ஜிஸ்மோன் என்ற கலைஞர். அவர் ‘பைசைக்கிள் தீவ்ஸ் (Bicycle Thieves) என்ற படத்தை இயக்கியதன் மூலம் தற்போது அவர் மலையாள திரையுலகில் இயக்குநராக வலம் வருகின்றார்.
இந்நிலையில் இத்தனை பெருமைகளைக் கொண்ட ரஜினிக்கு மலாய் மொழியில் பின்னணிக் குரல் கொடுக்கப் போகும் அந்த மலேசியக் கலைஞர் யார்? என்பது விரைவில் தெரியவரலாம் அல்லது அதற்கான குரல் தேர்வுகளும் விரைவில் அறிவிக்கப்படலாம்.
தொகுப்பு: ஃபீனிக்ஸ்தாசன்