Home Featured தமிழ் நாடு தமிழகப் பார்வை: எந்தப் பக்கம் விஜயகாந்த்? காஞ்சிபுரம் மாநாடு விடை தருமா?

தமிழகப் பார்வை: எந்தப் பக்கம் விஜயகாந்த்? காஞ்சிபுரம் மாநாடு விடை தருமா?

661
0
SHARE
Ad

ஒரு விஷயத்தில் விஜயகாந்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்!

காறி உமிழ்ந்தார் – பத்திரிக்கையாளர்களைத் திட்டினார் – சக கட்சிக்காரர்களை அடித்தார் – கூட்டங்களில் உளறிக் கொட்டுகின்றார் – என்றெல்லாம் எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து கொண்டிருக்கும்போதே,

எல்லா அரசியல் கட்சிகளும் அவருக்கு எதிராக கருத்துக்களைச் சொல்லாமல்,  “எங்கள் கூட்டணிக்கு வருவார் என நம்புகின்றோம்” என அவர்களைக் கூற வைத்திருப்பதே இன்றைய அரசியல் சூழலில் ஒரு சாதனைதான்!

#TamilSchoolmychoice

vijaykanth170908_02அடுத்ததாக, இன்று அவரது தேமுதிக கட்சி சார்பாக காஞ்சிபுரத்தில் நடைபெறும் அரசியல் திருப்புமுனை மாநாட்டை நோக்கி தமிழகத்தின் மொத்தப் பார்வையையும் ஒருங்கே திருப்பியிருப்பதும் அவரது அரசியல் காய் நகர்த்தலின் ஒரு சாதனைதான்.

தமிழக வாக்காளர்களும், அரசியல் சக்திகளும், இன்று வைத்த கண் வாங்காமல், தங்கள் செவிகளை கூர்மையாக்கி, விஜயகாந்த் என்ன சொல்லப் போகின்றார் இந்த மாநாட்டில், என காத்துக் கிடக்கின்றனர். அந்த வகையில் விஜயகாந்த்துக்கு அரசியல் ரீதியாக இன்றைய மாநாடும் ஒரு வெற்றிதான்!

விஜயகாந்தின் முடிவை வைத்துத்தான் தமிழக சட்டமன்றத் தேர்தல்களின் வெற்றி-தோல்வி வாய்ப்புகளும் அமையும் என்ற அளவுக்கு தமிழக அரசியலை இன்றுவரை ஸ்தம்பிக்கச் செய்திருக்கின்றார் விஜயகாந்த்.

ஆனால், அவர் எடுக்கப் போகும் முடிவு அவரை அடுத்த வெற்றிக் கட்டத்துக்குக் கொண்டு செல்லுமா அல்லது சொதப்பலாக முடியுமா என்பதுதான் அடுத்த கேள்வி!

இன்றைய மாநாட்டில் கூட அவர் எதையும் வெளிப்படையாகக் கூற மாட்டார் என்றே கருதப்படுகின்றது. அதனால், தேமுதிக தொண்டர்களும் இந்த மாநாட்டில் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை என்றும் சில தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எந்தப் பக்கம் விஜயகாந்த்?

விஜயகாந்துக்கு இன்றைய நிலையில் நான்கு திசைகளில் அரசியல் ரீதியாக இயங்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

முதலாவது, தனியாக நின்று, எல்லா இடங்களிலும் போட்டியிடுவது! அதன்மூலம் தனது தனிப் பெரும் சக்தியை நிரூபிப்பது!

இரண்டாவது, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைவது!

மூன்றாவது, வைகோ ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மக்கள் நலக் கூட்டணியில் இணைவது!

நான்காவது, பாஜக கூட்டணியில் இணைவது!

இதில், விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவது என்பது சாத்தியமில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அப்படிப் போட்டியிட்டு, வாக்குகள் குறைந்து விட்டால், அத்துடன் அவரது அரசியல் சக்தி நீர்த்துப் போய்விடும் என்பதுடன், மிகச் சில தொகுதிகளையே தேமுதிகவால் கைப்பற்ற முடியும் என்ற அச்சமும் நிலவுகின்றது.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைவாரா?

vijaykanthதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தால், அதன் மூலம் கருணாநிதியையோ, ஸ்டாலினையோ தமிழக முதல்வர் பதவியில் அமர்த்தி வைத்து அழகு பார்க்கத்தான், விஜயகாந்த் உதவுவாரே தவிர, அவருக்கென்று தனியாக முக்கியத்துவம் எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை.

மேலும், திமுகவுடன் காங்கிரஸ் ஏற்கனவே இணைந்து விட்டதால், இனி விஜயகாந்த் அங்கு சென்றாலும் அவருக்கு அரசியல் ரீதியாக மூன்றாவது இடம்தான் கிடைக்கும். தொகுதிகள் வேண்டுமானால், காங்கிரசைவிட அதிகமாகக் கிடைக்கலாம் என்பது தவிர, அரசியல் சக்தி என்று பார்க்கும்போது, விஜயகாந்த் மூன்றாவதாகத்தான் பார்க்கப்படுவார்.

கூடுதல் தொகுதிகள் கிடைத்தாலும், திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க (அப்படியே பிடித்தால்) அவர் உதவினார் என்ற நிலைமைதான் ஏற்படுமே தவிர, அவருக்கென தனியாக முக்கியத்துவமும் கிடைக்காது என்பதுடன் ஆட்சியில் பங்கு என்பதும் அவருக்குக் கிடைக்காது. ஸ்டாலின்தான் முன்னிறுத்தப்படுவார்!

அப்படியே திமுக ஆட்சியைப் பிடித்துவிட்டால், அதன்பின்னர் அதிமுக கடந்த தேர்தலுக்குப் பின்னர் தன்னை எட்டி உதைத்து வெளியேற்றியதுபோல் திமுகவும் செய்யாது என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வியும் அவருக்குள் – அவரது குடும்பத்துக்குள் – நிலவும்!

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்களிடையே அவ்வளவான வரவேற்பு இல்லை என்பதும் விஜயகாந்தை இந்நேரம் யோசிக்க வைத்திருக்கும். 2ஜி ஊழல் கூட்டணி, இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட காரணமான கூட்டணி என்பதுபோன்ற கடுமையான எதிர்மறை தாக்குதல்களுக்கு மத்தியில் விஜயகாந்த்தும் அவர்களோடு இணைந்து கொண்டால் –

அந்த எதிர்மறை விமர்சனங்கள் விஜயகாந்தையும், அவரது கட்சியையும்  பாதிக்கவே செய்யும்!

மக்கள் நலக் கூட்டணியா? பாஜகவா?

vaiko-vijayakanthவிஜயகாந்துக்கு இருக்கும் அடுத்த வாய்ப்புகள் என்று பார்த்தால், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தால் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கலாமே தவிர, தொகுதிகளை வென்றெடுக்கக் கூடிய வெற்றி வாய்ப்பு கிடைக்காது என அவர் அஞ்சுவதாகத் தெரிகிறது.

எனவே, மக்கள் நலக் கூட்டணியில் இணைவது என்பது விஜயகாந்தின் விருப்பப் பட்டியலில் இருக்கக் கூடிய கடைசி வாய்ப்பு என்றுதான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்.

பாஜக கூட்டணி என்பது விஜயகாந்துக்குப் பல வழிகளில் வசதியான கூட்டணியாக இருக்கும் எனப் பார்க்கப்படுகின்றது. மத்தியில் அடுத்த நான்காண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கப்போகும் கட்சி என்ற நிலையில் ஒரு வலுவான கூட்டணியை அவர்களோடு விஜயகாந்த் அமைத்துக் கொள்ள முடியும் என்பதோடு, “தேர்தல் நிதி-செலவினங்கள்” என்று வரும்போதும், அந்தக் பாஜக கூட்டணி விஜயகாந்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

பாஜக கூட்டணியில் இணைவதால் விஜயகாந்துக்கும் மிகுந்த முக்கியத்துவமும் கிடைக்கும் என்பதோடு, தமிழகத் தேர்தலுக்குப் பின்னரும் மத்திய அரசாங்கத்தைப் பயன்படுத்தி விஜயகாந்த் “பல காரியங்களை” தனக்கு சாதகமாக அவர் சாதித்துக்கொள்ள முடியும்.

pon-radhakrishnan-vijayakanthஇன்னும் கூட அவர் பாஜக கூட்டணியில்தான் இருக்கின்றார் என்பதும் இன்னும் அவர் அதிகாரபூர்வமாக அதிலிருந்து விலகவில்லை என்பதும் அவர் எடுக்கக் கூடிய முடிவுக்கு பக்கபலமாக இருக்கப் போகும் மற்ற காரணங்கள்!

அவர்களோடு, இராமதாஸ் தலைமையிலான பாமகவும் இணைந்து கொள்ளும் வாய்ப்பும் அதிகம்.

இன்றைய சூழலில், விஜயகாந்த் அதிகக் கூடுதலான தொகுதிகளை, பாஜக கூட்டணியின் மூலமே பெற முடியும் என்பதால், அதன் மூலம் அவரது கட்சியினரையும் – அதிக சட்டமன்றத் தொகுதிகளைப் பெறுவதன் மூலம் – திருப்திப்படுத்த முடியும்!

ஒரே பிரச்சனை! தமிழகத் தேர்தல் என்று வரும்போது, மதவாத சக்திகளோடு கூட்டணி என்ற பிரச்சனை எழுந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மக்களின் ஆதரவை விஜயகாந்த் கட்சி இழக்கக் கூடிய அபாயம் இருக்கலாம்.

ஆனால், இன்னொரு கோணத்தில் பார்த்தால், பாஜக, மத வாத சக்தி என்ற கோஷங்களும், கூக்குரல்களும் இனியும் தமிழக மக்களிடத்தில் எடுபடுமா என்பது சந்தேகந்தான்.

காரணம், ஆட்சிக்கு வந்த பின்னர், ஒட்டுமொத்த இந்தியாவையும் பொருளாதார, வணிக ரீதியில் முன்னேற்றும் பாஜகவின் நடவடிக்கைகளால் – மோடியில் தனித்துவ கவர்ச்சியால் – இனியும் பாஜக என்பது மதவாத சக்தி என்ற கூச்சல் அவ்வளவாக தமிழக வாக்காளர்களிடையே – குறிப்பாக இளைஞர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தாது என்ற பார்வையும் நிலவுகின்றது.

ஆனால், சட்டமன்றத் தேர்தல் என்று வரும்போது பல தொகுதிகளில் சிறுபான்மையினராக இருக்கக் கூடிய முஸ்லீம்-கிறிஸ்துவ வாக்காளர்களின் எண்ணமும், சிந்தனையும் கணிசமான அளவில்  ஒரு தொகுதியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக் கூடும்.

ஆக, எந்தப் பக்கம் போவார் விஜயகாந்த்?

இன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாடு – இதற்கான நேரடி பதிலைத் தராது என்றாலும் –

ஓரளவுக்காவது சில அறிகுறிகளை வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது!

-இரா.முத்தரசன்