இலண்டன் – ஐரோப்பிய யூனியன் எனப்படும் ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது விலகித் தனியாகச் செயல்படுவதா என்பதை நிர்ணயிக்க பொது வாக்கெடுப்பு நடத்தும் நாளாக ஜூன் 23-ஐ நிர்ணயித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன்.
கடந்த சில ஆண்டுகளாகவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இணைந்திருப்பதால், பிரிட்டன் பின்னடைவுகளை எதிர்நோக்குகின்றது என்ற எண்ணமும், விவாதங்களும் வலுத்து வந்தன.
இந்நிலையில் கடந்த பிரிட்டன் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தான் மீண்டும் வென்று வந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பது குறித்து, பொது வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவேன் என டேவிட் கேமரூன் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படியே, பொது வாக்கெடுப்புக்கான நாளாக ஜூன் 23ஆம் தேதியை நிர்ணயித்துள்ளதாக இன்று அவர் அறிவித்திருக்கின்றார்.
இதற்கிடையில், பெல்ஜியத்தின் தலைநகர் புருசல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கேமரூன், மற்ற தலைவர்களுடன் நிகழ்த்திய பேச்சு வார்த்தைகளின் காரணமாக, இனி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சிறப்பு அந்தஸ்துடன், சில சலுகைகளுடன் இயங்கும் என்றும் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன், பாதுகாப்பான, பலம் வாய்ந்த நாடாக பிரிட்டன் தொடர்ந்து திகழ்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதே ஒரே வழி என்றும் கேமரூன் ஆணித்தரமாக வலியுறுத்தி உள்ளார்.
இதன் காரணமாக, அவரது அமைச்சரவையிலும், ஆளும் கட்சியிலும் கடும் பிளவுகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் அவரது கட்சியிலேயே ஒரு பிரிவினர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.