Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘காதலும் கடந்து போகும்’ – சுவாரஸ்மான கதை! எதார்த்தமான காட்சிகள்! ரசிக்க வைக்கும் வசனங்கள்!

திரைவிமர்சனம்: ‘காதலும் கடந்து போகும்’ – சுவாரஸ்மான கதை! எதார்த்தமான காட்சிகள்! ரசிக்க வைக்கும் வசனங்கள்!

698
0
SHARE
Ad

bg1கோலாலம்பூர் – பேருந்தில் போய்க் கொண்டிருக்கும் போது, தற்செயலாக பின் இருக்கையிலோ அல்லது முன் இருக்கையிலோ, யாரோ சிலர், யாரைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கதையில் பெருசா ஒன்னும் ஹீரோயிசம் இருக்காது, பிரமிக்க வைக்கிற மாதிரியான விஷயங்கள் இருக்காது. ஆனால் கேட்குறதுக்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு எளிமையான கதை, ஒரே நேர்கோட்டில் செல்லும் திரைக்கதை இவ்வளவு தான் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம்.

கொரிய படமான ‘My Dear Desperado’ என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுப்பதிப்பு தான் ‘காதலும் கடந்து போகும்’. அதை அப்படியே தனது பாணியில் மாற்றியிருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.

#TamilSchoolmychoice

கதைச் சுருக்கம்

74531-CPmJWIeUcAAY3Z_கதாநாயகி மடோனா செபாஸ்டின் நெட்வொர்க் எஞ்சினியரிங் படித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்கிறார். ஆனால் அவள் வேலைக்கு செல்வதை விரும்பாத பெற்றோர் திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர். அதையும் மீறி சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்து பணியாற்றத் துவங்குகிறாள். துரதிருஷ்டவசமாக அந்த நிறுவனம் திவாலாகிறது. எங்கே வீட்டிற்குத் தெரிந்தால் திருமணம் செய்து வைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் சென்னையிலேயே ஒரு வாடகை வீட்டில் தனியாகத் தங்கி வேறு வேலை தேடுகிறாள்.

அவள் தங்கியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் கதாநாயகன் விஜய் சேதுபதி வசிக்கிறார். ரவுடி கும்பலிடம் அடியாளாக வேலை செய்யும் விஜய்சேதுபதியைப் பார்த்து முதலில் பயப்படும் மடோனா, பின்னர் அவருடன் நல்ல நண்பராகிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவருக்குள்ளும் காதல் லேசாகத் துளிர்விடும் பொழுது நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக் கதையின் சுவாரஸ்யம்.

நடிப்பு

Kadhalum-Kadanthu-Pogum-Movie-Stills-2-1விஜய்சேதுபதி, மடோனாவின் நடிப்பு தான் படத்திற்கு பக்க பலம். இருவரும் அந்தந்தக் கதாப்பாத்திரத்திற்கு மிகச் சரியாகப் பொருந்துகின்றனர். இருவருக்குள்ளும் ஏற்படும் அறிமுகம் தொடங்கி நட்பாக உருமாறும் உணர்வுகள் வரை அனைத்தும் அவ்வளவு சுவாரஸ்யம். பக்கத்து வீட்டில் நடப்பதைப் போன்ற உணர்வு.

“உண்மையாவே நீங்க ரவுடியா .. ஏன்னா எப்ப பார்த்தாலும் உங்க முகத்துல தான் காயம் இருக்கு” என்று அப்பாவியாக மடோனா கேட்பதாகட்டும், “உங்களுக்கு எஸ்கிமோ தெரியுமா.. குளிர்காலத்தில் நாய கட்டிப் பிடிச்சு தூங்குவாங்க” என்று சமாளிப்பதாகட்டும் நடிப்பில் மடோனா மலையாள தேசத்தின் இன்னொரு புதுவரவு.

அதிலும், ஒவ்வொரு முறையும் வேலைக்கான நேர்காணலுக்குச் சென்று விட்டு, அறைக்கு வரும் போது தோல்வியின் வலியில் மடோனா காட்டும் முகபாவணைகள் அழகு.

இவர்கள் தவிர, ‘மொடா’ குமாராக சமுத்திரக்கனி குறைவான காட்சிகளே வந்தாலும் மிரட்டுகிறார். அதோடு மடோனாவின் அப்பா கதாப்பாத்திரம், விஜய்சேதுபதியின் முதலாளி, கார் ஓட்டுநராக வரும் அந்த புதுமுக நடிகர் என ஒவ்வொருவரும் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளனர்.

அதிலும், குறிப்பாக விஜய் சேதுபதி, மடோனாவின் பெற்றோர்களைச் சந்திக்கும் காட்சியும், ஐடி கம்பெனியில் நடக்கும் கடைசி நேர்காணல் காட்சியிலும் நம்மையும் மறந்து சிரிக்க வைக்கின்றது.

வசனம் 

Kadhalum-Kadanthu-Pogum-Movie-Stills-4படத்தில் ஜனரஞ்சகமான காட்சிகள் தான் அதிகம். அதற்கு ஏற்றார் போல் ரசித்து சிரிக்க வைக்கும் வசனங்கள் நம்மை மிகவும் கவர்கின்றன.

“நாயா.. நானா? வவ் ..வவ்.. அக்கா இவ நாய் கூட படுத்தவக்கா…”

“என்ன வேணும்?” “ஆங்… உன் ஊத்தப்பல்லு நாலு பார்சல் வாங்க வந்தேன்”

“இது ரொம்ப ஓவரா இல்ல..” “மூஞ்சி ரொம்ப லோக்கலா இருக்குல்ல? இப்படி தான் மேட்ச் பண்ண முடியும்”

இப்படியாக, விஜய் சேதுபதிக்கும், மடோனாவுக்கும் கிண்டல் வசனங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதை அவர்கள் தங்களது பாணியில் சொல்லும் போது நம்மால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஒளிப்பதிவு, இசை

FB_IMG_1452863544870-765x510நலன் குமாரசாமியின் முந்தைய படமான ‘சூது கவ்வும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் தான் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். காட்சிகள் மிக இயல்பாகத் தெரிகின்றன. ரயில்நிலையங்கள், விழுப்புரம், சென்னையின் நடுத்தரவர்க்க குடியிருப்புகள் என காமிரா வைக்கப்பட்ட இடங்கள் கதைக்கு ஏற்றவாறு எதார்த்தமாக உள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. கககபோ பாடல் மனதில் நிற்கின்றது. சூது கவ்வும் படத்தில் வந்த ‘டிங் டாங்’ பாடல் போன்று இந்தப் படத்திலும் ஒரு பாடல் வைத்திருக்கிறார்கள்.

‘நானும் ரவுடி தான்’ படத்தின் சாயலை ஆங்காங்கே உணர முடிகின்றது. என்றாலும் விஜய் சேதுபதியின் நடிப்பு அதையெல்லாம் நம்மை மறக்கச் செய்து ரசிக்க வைக்கின்றது.

மொத்தத்தில், காதலும் கடந்து போகும் – சுவாரஸ்மான கதை! எதார்த்தமான காட்சிகள்! ரசிக்க வைக்கும் வசனங்கள்! ஆகியவை ரசிகர்களை படம் முடியும் வரை இருக்கையில் அமர வைக்கின்றது.

– ஃபீனிக்ஸ்தாசன்