சென்னை – வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடவுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கிடையே விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்று கூறுவதற்கு சென்னையில் நடைபெற்ற தே.மு.தி.க மகளிர் அணி மாநாட்டில் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.
பிரேமலதா கூறுகையில், ”முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்பவர்களும் தே.மு.தி.கவுடன் ஒத்தக்கருத்துக் கொண்ட கட்சிகளும் கூட்டணிக்கு வரலாம். திமுக அதிமுக இல்லாத ஒரு ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவோம்.
முரசுதான் நாளைய தமிழகத்தின் அரசு. விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். அவருக்கு (சைனஸ்) முக்கடைப்பு, தொண்டை அடைப்பு போன்ற உடல்ரீதியான பிரச்சினைகள் இருக்கிறது.
சிவாஜிக்கு பிறகு, பக்கம் பக்கமாக வசனம் பேசி நடிப்பவர் விஜயகாந்த். தே.மு.தி.க கட்சியுடன் கூட்டணிக்கு வருபவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென்றே தனியாக 7 பேர் கொண்ட குழு தே.மு.தி.க சார்பில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.