ஷாஆலாம் – இன்று ஷா ஆலாமில் மகாதீர்-மொகிதின் கலந்து கொள்ள, டத்தோ சைட் இப்ராகிம் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் ஏற்பாடு செய்த நஜிப் எதிர்ப்புப் பேரணியில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் (படம்) கலந்து கொண்டு உரையாற்றியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான செய்தியாகியுள்ளது.
அவரது உரையின் ஒரு பகுதியும் சமூக வலைத் தளங்களிலும் உலா வரத் தொடங்கியுள்ளது.
நஜிப் பதவி விலகக் கோரும் மக்கள் பிரகடனத்தின் போதும், அதைத் தொடர்ந்த எதிர்ப்புப் பேரணிகளிலும், இதுவரை மஇகா தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர்.
நஜிப் எதிர்ப்புக் கூட்டங்களில் அம்னோ சார்பில் பலர் கலந்து கொள்ள, மசீச சார்பில் முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் கலந்து கொண்டிருக்கின்றார்.
ஆனால், மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவர் கலந்து கொள்வது இதுதான் முதன் முறை எனக் கருதப்படுகின்றது.
முருகேசன் முன்பு மஇகாவில் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், தலைமைச் செயலாளராகவும் இருந்தவர். அண்மையக் காலத்தில் மஇகாவில் பழனிவேலு-சுப்ரா இரு தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவுகளைத் தொடர்ந்து பழனிவேல் அணியில் இணைந்து இதுநாள் வரையில் முருகேசன் செயல்பட்டு வந்தார்.
மஇகா சார்பில் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் 2008ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டில் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியிலும் முருகேசன் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
(மேலும் செய்திகள் தொடரும் – மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முருகேசன் பேசியது என்ன?)