புதுடெல்லி – மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இன்று முதல் திரைக்கு வந்துள்ள ‘ஜங்கிள் புக்’ என்ற ஹாலிவுட் அனிமேசன் திரைப்படத்திற்கு, இந்தியாவில் யு/ஏ சான்றிதழ் வழங்கியிருப்பதற்கு இந்திய சினிமாவைச் சேர்ந்த பலரும் கடும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவினைக் கதைக்களமாகக் கொண்ட இத்திரைப்படத்தில், ‘மௌக்லியாக’ அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் சேத்தி என்ற சிறுவன் நடித்துள்ளான்.
இப்படத்தை டிஷ்னி நிறுவனம் தயாரிக்க ஜான் பவ்ரியூ என்ற ஹாலிவுட் இயக்குநர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருப்பதற்கு இந்திய மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (சிபிஎப்சி) தலைவர் பஹ்லாஜ் நிகாலானி சொல்லும் காரணம் என்னவென்றால், படத்தில் இடம்பெற்றுள்ள 3டி காட்சிகள் மிகவும் அச்சமூட்டுவதாக இருப்பதோடு, பெற்றோர்கள் துணையுடன் தான் குழந்தைகள் படத்தைப் பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
‘ஜங்கிள் புக்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள யு/ஏ சான்றிதழ் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாலிவுட் தயாரிப்பாளர் முகேஸ் பட், “இது இந்தியாவிற்கே அசிங்கம்” என்று தெரிவித்துள்ளார்.
“நமது நாடு எவ்வளவு கிறுக்குத்தனமாகப் போய்விட்டது என்பதைக் காட்டுகின்றது. ஜங்கிள் புக்கிற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால், சிபிஎப்சி குறித்து அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம். சிபிஎப்சி-ஐத் தூக்கி குப்பையில் தான் எறிய வேண்டும்” என்றும் முகேஸ் பட் கூறியுள்ளார்.