Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ’24’ – சூர்யாவின் (சேதுராமனின்) சுவாரஸ்யமான பிராஜக்ட்!

திரைவிமர்சனம்: ’24’ – சூர்யாவின் (சேதுராமனின்) சுவாரஸ்யமான பிராஜக்ட்!

1081
0
SHARE
Ad

24 suryaகோலாலம்பூர் – ‘டைம் மெஷின்’ மூலம் இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் செல்லும் கதையம்சம் கொண்ட படங்கள், ஹாலிவுட்டில் பல வருடங்களுக்கு முன்பே வெளிவந்து, ரசிகர்கள் பார்த்துப் பழகிப் போன ஒன்றாகிவிட்டது.

ஆனால், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், அப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட படங்கள் இப்போது தான் வரத் துவங்கியுள்ளன.

அந்த வகையில், சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில், ‘டைம் மெஷின்’ கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு, இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது ‘24’ திரைப்படம்.

#TamilSchoolmychoice

சூர்யா தனது சொந்த நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

கதைச்சுருக்கம்

24-story_647_012416121151ஆத்ரேயாவும், சேதுராமனும் இரட்டைச் சகோதரர்கள் (இரண்டுமே சூர்யா தான்). 180 நொடிகள் இடைவெளியில் பிறந்தவர்கள். ஆனால் குணாதிசயத்திலோ இருவரும் 180 டிகிரி கோணத்தில் வேறுபட்டு இருக்கிறார்கள்.

தம்பி சேதுராமன் கண்டுபிடிக்கும் அற்புதமான டைம் மெஷினை (கைக்கடிகாரம் வடிவில்) அவரிடமிருந்து அபகரிக்க நினைக்கிறார் அண்ணன் ஆத்ரேயா. (கண்டுபிடிக்கிறதே பயன்படுத்தத் தானே? அதை எதற்கு தம்பியிடமிருந்து அடித்துப் பறிக்க வேண்டும்?).

அந்த டைம் மெஷினை அபகரிப்பதற்காக தம்பி சேதுராமன், அவரது மனைவி நித்யாமேனன் ஆகியோரைக் கொலை செய்கிறார்.

என்றாலும், அந்தக் கைக்கடிகார வடிவிலான டைம் மெஷினும், சேதுராமனின் கைக்குழந்தையான மணியும் (இதுவும் சூர்யா தான்) அவரிடமிருந்து தப்பித்து சரண்யா பொன்வண்ணனிடம் சேர்ந்துவிடுகின்றனர்.

26 வருடங்கள் சென்ற பிறகும் அந்தக் கைகடிகாரத்தைத் தேடி அலையும் ஆத்ரேயா, தம்பி மகனான இளம் சூர்யாவைக் கண்டுபிடித்துவிடுகிறார். அதன் பிறகு நடக்கும் பரபரப்பு தான் படத்தின் சுவாரஸ்யம்.

நடிப்பு

மூன்று வேடங்களில் சூர்யா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆத்ரேயாவாக தோற்றத்திலும், நடிப்பிலும், கம்பீரக் குரலிலும் மிரட்டுகின்றார். விஞ்ஞானி சேதுராமனாக உடல்மொழியில் ரசிக்க வைக்கின்றார். இளம் சூர்யாவாக காமெடிக் காட்சிகளிலும், ஆக்சன் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக, அந்த கடிகாரத்தின் சக்தி பற்றி அறிந்து கொள்ளும் காட்சிகளிலும், சரண்யாவை அவர்களது குடும்பத்தில் கொண்டு சேர்க்கும் காட்சிகளிலும் நடிப்பில் நெகிழ வைக்கின்றார்.

அதுமட்டுமா, வீல்சேரில் இருந்து கொண்டு ஆட்டிப் படைப்பதில் அப்படியே ஆத்ரேயா கதாப்பாத்திரமாகவே மாறியிருக்கிறார். அதில் நடித்திருப்பது சூர்யாவா என்று பிரித்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு நடிப்பு அபாரம்.

suriya_24_1722016_mபடத்தில் இரண்டு ஹீரோயின்கள்..  நித்யாமேனன் சில காட்சிகளே வந்தாலும் ஈர்க்கிறார். அவரது குரலும், நடிப்பும் அழகு.

சமந்தாவிற்கும் அழகான கதாப்பாத்திரம். காதல் காட்சிகள், பாடல் காட்சிகளில் அவரது முகபாவணைகள் ரசிக்க வைக்கின்றன.

இவர்கள் தவிர, அம்மாவாக சரண்யா, சத்யன், கிரீஷ் கர்னாட், மோகன் ராம், அஜய் (மித்ரன் கதாப்பாத்திரம்) ஆகியோரின் நடிப்பு அந்தந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துகிறது.

திரைக்கதை மற்றும் தொழில்நுட்பம்

குழப்பமின்றி எளிமையாகப் புரியும் படியாக திரைக்கதை அமைத்து, ‘டைம் மெஷின்’ மூலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைக் கையாண்டிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் விக்ரம் கே குமார்.

அதற்கேற்ப தொழில்நுட்ப காட்சிகளையும் தத்ரூபமாக அமைத்திருப்பது ஆங்கிலப் படங்களின் தரத்தில் அமைந்துள்ளது.

குறிப்பாக, சேதுராமனின் ஆய்வுக்கூடத்தில் காட்டப்படும் கருவிகள், குழந்தையைத் தாலாட்டும் எந்திரம், அந்த அற்புதக் கைக்கடிகாரம், அதனை வைக்கப்பயன்படுத்தும் பெட்டி, அதன் வித்தியாசமான சாவி உள்ளிட்டவைகளின் வடிவமைப்பு சூப்பர்.

ஆங்கிலப் படங்கள் பார்த்திராத தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவை வியப்பாகவும், ஹாலிவுட் படங்களைத் தொடர்ந்து பார்த்து ரசித்து வரும் ரசிகர்களுக்கு ‘நல்லா வந்திருக்கே’ என்றும் தோன்றும்.

திரைக்கதையில் இன்னொரு விசயமும் ஈர்த்தது. சமந்தா குடும்பத்தின் ‘வெள்ளிக்கிழமை மௌன விரதம்’. எதற்காக அப்படி? என்று முதலில் ரசிகர்களை யோசிக்க வைத்து, கடைசியில் அதற்கான பதிலை தந்திருப்பது அருமை.

hqdefaultபடத்தில் தொய்வு என்றால், அது சூர்யா – சமந்தாவின் காதல் காட்சிகளின் நீளம் தான். ‘ரொமான்சோபோபியா’, ‘வாட்ச் மெக்கானிக்’ எனத் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தைகளைக் கூறி வெறுப்பேற்றி விடுகின்றனர். காதல் காட்சிகளில் இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

அதோடு, டைம் மெஷினைக் கையாள்வதில் சில லாஜிக்கும் உதைக்கிறது.

ஒளிப்பதிவு, இசை

படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டியிருப்பதில் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு பெரும்பங்கு வகித்துள்ளது.

சேதுராமனின் ஆய்வுக்கூடம், கழுகு, இரயில் காட்சிகள், சென்னையின் வீதிகள், கிரிக்கெட் மைதானம், பெரிய வீடு என படத்தில் பிரம்மிக்க வைக்கும் ஏராளமான காட்சிகள் உள்ளன. 1990-க்கும், 2016-க்கும் இடையிலான வித்தியாசத்தை மிகச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார்.

அதற்கேற்ப ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை பக்(கா)பலம் சேர்த்துள்ளது.

பாடல்களைப் பொறுத்தவரையில், ‘காலம் என் காதலி’, ‘மெய்நிகரி’, ‘ஆற்றல்’ உள்ளிட்ட பாடல்களும், கவிப்பேரசு வைரமுத்து, மதன் கார்க்கி வரிகளும் ரசிக்க வைத்தாலும் கூட, இந்தக் கூட்டணியின் பாடல்களைக் கேட்ட உடனே உடம்பிற்குள் ஒரு மின்சாரம் பாயுமே அது சற்று குறைவாகத் தான் உள்ளது.

மற்றபடி, வித்தியாசமான சினிமா ரசிகர்களுக்குத் தீனி போடுவதில் ‘24’ எந்த விதத்திலும் குறை வைக்கவில்லை.

மொத்தத்தில் ‘24’ – சூர்யாவின் (சேதுராமனின்)சுவாரஸ்யமான பிராஜக்ட்!

-ஃபீனிக்ஸ்தாசன்