சிங்கப்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர் லீ சியன் லூங் திடீரென உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தடைப்பட்ட சுதந்திர தின நிகழ்ச்சிகள், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
அவரது உடல் நிலை மோசமாக இல்லை என்றும் அவரை மருத்துவக் குழுவினர் கவனித்து வருவதாகவும் பிரதமர் துறை அலுவலகம் அறிவித்திருக்கின்றது. அவருக்கு ஹார்ட் அட்டாக் போன்ற இதயத் தாக்குதல் எதுவும் நிகழவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக நேரம் நின்றிருந்த காரணத்தாலும், அதிக வெப்பமான சூழல், களைப்பு காரணமாக லீயின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் அவரைக் கைத்தாங்கலாக மேடையிலிருந்து அழைத்துச் சென்றனர்.
முதலில் மலாய் மொழியில் பேசிய பிரதமர் பின்னர் மாண்டரின் மொழியிலும், ஆங்கிலத்திலும் தனது உரையைத் தொடர்ந்துள்ளார். அவர் சுமார் ஒரு மணி நேரமாக உரையாற்றிக் கொண்டிருந்த தருணத்தில் அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
பின்னர் துணைப் பிரதமர் தியோ சீ ஹீன் ஒலிபெருக்கி முன் சென்று, பிரதமர் லீ மீண்டும் தனது சுதந்திர தின உரையைத் தொடர விரும்புகின்றார் என பலத்த கைத்தட்டல்களுக்கிடையில் அறிவித்தார்.
லீ உடல் நலம் குறித்து தான் கவலைப்படவில்லை என்றும் காரணம் அவருக்கு இன்று வரிசையாக நிறைய நிகழ்ச்சிகள் இருந்தன என்றும் அதனால்தான் அவருக்கு லேசான மயக்க நிலை ஏற்பட்டது என்றும் துணைப் பிரதமர் தருமன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சுதந்தி தின நிகழ்ச்சிகள் மீண்டும் 10.40 மணியளவில் தொடங்கின.
தான் உறுதி வழங்கியிருந்தபடி பிரதமர் லீ மீண்டும் தனது உரையைத் தொடர்ந்தார்.