கோலாலம்பூர் – இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய விசாரணைக் குழு மற்றும் காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வரும் ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எனினும், இந்த இரு தகவல்களும் மலேசியாவால் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஜாகிர் நாயக் ஆப்பிரிக்காவிலோ அல்லது தாய்லாந்திலோ பதுங்கி இருக்கலாம் என முதலில் நம்பப்பட்டது. ஆனால் தற்போதைய தகவலின் படி அவர் மலேசியாவில் உள்ளதாக நம்பப்படுகின்றது.
அதோடு, ஜாகிர் நாயக்கிற்குப் பதிலாக மும்பையில் பிரதிநிதிப்பவர்கள், அவர் மலேசியக் குடியுரிமை பெற்றுவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட ‘தோக்கோ மால் ஹிஜாரா’ என்ற பட்டத்தின் படி அவருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
“மலேசியக் கொள்கையின் படி, அந்நாட்டின் உயரிய விருது பெற்ற அவருக்கு, குடியுரிமை வழங்கியுள்ளது மலேசியா” என்று இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.