ஜோர்ஜ் டவுன் : சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் கடந்த மாதம் நைஜிரியாவில் நிகழ்த்திய சொற்பொழிவின்போது, பினாங்கு முன்னாள் முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இஸ்லாமுக்கு எதிரானவர் என்ற தொனியில் பேசியிருந்தார். அது தொடர்பான காணொலியைத் தன் முகநூல் பக்கத்தில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி பதிவேற்றம் செய்திருந்தார் சாகிர் நாயக்.
இதைத் தொடர்ந்து சாகிர் மீது புதிய வழக்கொன்றைப் பதிவு செய்திருக்கிறார் இராமசாமி. சாகிர் நாயக்கின் காணொலியை அவரின் முகநூல் பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும் – தனக்கு எதிராக அவதூறு கூறியதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் – ஊடகங்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் – என தன் வழக்கு மனுவில் நீதிமன்றத்தை இராமசாமி கோரியிருக்கிறார்.
சாகிர் நாயக் ஏற்கனவே இராமசாமிக்கு எதிராகத் தொடுத்த அவதூறு வழக்கில் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி 1,520,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதைத் தொடர்ந்து இராமசாமிக்கு ஆதரவாக பொதுமக்களிடம் இருந்து அந்த நிதியைத் திரட்டும் முயற்சியை தமிழர் குரல் இயக்கம் தொடங்கியது. வியாழக்கிழமை (நவம்பர் 10) காலையில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கான இலக்கை விட 3 ஆயிரம் ரிங்கிட் கூடுதலாக சேர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 1,520,000 ரிங்கிட்டுக்கான காசோலையை இராமசாமி தன் வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்தார். எனினும் சாகிர் தொடுத்த அந்த வழக்கில் இராமசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.