புதுடில்லி : இஸ்ரேல் – ஹாமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து ஏமன் நாட்டில் உள்ள ஹாவுத்தி குழுவினர் டுரோன் என்னும் ஆளில்லா சிறுரக விமானங்கள் மூலம் செங்கடல், அரேபியக் கடல் பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா, அந்தக் கடல் பகுதிக்கு தனது போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.
அத்துடன் பல நாடுகள் இணைந்த தற்காப்பு இராணுவம் ஒன்றை அமெரிக்கா உருவாக்கி வருகிறது.
இந்த பன்னாட்டு இராணுவ அமைப்பில் இணைந்து கொள்ள இந்தியாவும் தன் போர்க்கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இந்தியாவின் மேற்குக் கரையோரக் கடல் பகுதியில் இந்தியாவின் வர்த்தகக் கப்பல் ஒன்றைக் குறிவைத்து சில நாட்களுக்கு முன்னர் டுரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா இந்த முடிவை எடுத்திருக்கிறது.
அதன் போர்க்கப்பல்கள் செங்கடல், அரேபியக் கடல் பகுதிகளில் இந்தியாவின் வர்த்தகக் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.