Home Featured தமிழ் நாடு சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றலாம் – சுப்ரமணிய சுவாமி ஆலோசனை!

சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றலாம் – சுப்ரமணிய சுவாமி ஆலோசனை!

633
0
SHARE
Ad

subramaniam-swamy

சென்னை – சசிகலா விவகாரத்திலும், தமிழ் நாட்டு அரசியல் களத்திலும் தற்போது கதாநாயகனாகியிருப்பவர் சர்ச்சைக்குரிய சுப்ரமணிய சுவாமி. அவர் நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் சசிகலாவை பாதுகாப்பு காரணங்கள் காட்டி, பெங்களூரு சிறையிலிருந்து சென்னை சிறைச்சாலைக்கு மாற்ற, அவரது வழக்கறிஞர்கள் மனுச் செய்யலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொடர்ந்து சுவாமி சில சுவாரசியமான, அதிரடியான கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவற்றில் சில:

  • “இன்னும் இரண்டு நாட்களில் சசிகலாவின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற மனுச் செய்யலாம். பழனிசாமி முதல்வரான பின்னர்  பாதுகாப்பு காரணங்கள் காட்டி சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும்”
  • “நான் மத்திய உள்துறை அமைச்சரை அழைத்து தமிழக காவல் துறையின் தலைமை ஆணையருக்கு (டிஜிபி) எச்சரிக்கை விடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை முறையற்றது எனக் கண்டித்தேன்”
  • “போதிய, வலுவான ஆதாரங்கள் இல்லாத புகார் ஒன்றைக் காரணம் காட்டி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க முனைந்துள்ள தமிழக டிஜிபியின் முறைகேடான செயல் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு நான் தெரிவித்துள்ளேன்”
#TamilSchoolmychoice

jayalalithaa vs sasikala

  • “ஜெயலலிதாவும், சசிகலாவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே அவர்களை எதிர்த்து நான் வழக்கு தொடுத்தேன். இன்று நான் சசிகலாவின் உரிமைகளுக்காக  பேசுவதைக் கண்டிப்பவர்கள் எல்லாம் அன்று ஒடுங்கி, நடுங்கி, ஒளிந்து கொண்டிருந்தார்கள்”
  • “இராவணனை, இராமன் கொன்ற பின்பு அவனுக்கு ராஜமரியாதையோடு நல்லடக்கம் செய்யவேண்டும் என இலட்சுமணனுக்கு இராமன் கட்டளையிட்டார். மகாபாரதத்தில், பீஷ்மரைக் கொல் என அர்ஜூனனுக்கு உத்தரவிட்ட கிருஷ்ணர்தான் பின்னர் அதே பீஷ்மருக்கு அம்புப் படுகை தயாரித்து அதில் அவரைப் படுக்க வைக்கும்படி அர்ஜூனனுக்கு கட்டளையிட்டார். இதுதான் இந்து தர்மம் – பாரம்பரியம்”
  • “நாட்டின் அரசியல் சாசனத்தைத் தற்காத்தும், சட்டத்துக்காகவும் நான் போராடிக் கொண்டிருப்பது திமுகவை அச்சம் கொள்ளச் செய்துள்ளது. காரணம் தேசியத்துக்கு எதிரான அந்தக் கட்சி தனது பாதை தடங்கல்கள் இன்றி இருக்க வேண்டும் என விரும்புகின்றது”
  • போலியான டுவிட்டர் செய்திகளை பதிவு செய்வதற்காக, மு.க.ஸ்டாலின் மருமகனும் மற்றும் மாறன்களும் 100 வேலையில்லா இளைஞர்களை பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கு ஒவ்வொரு டுவிட்டர் செய்திக்கும் தலா 200 ரூபாய் வழங்கப்போவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்”
  • “பழனிசாமி என்பது சுப்ரமணிய சுவாமியின் இன்னொரு தமிழாக்கப் பெயர்தான்”

இவ்வாறு சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்து தனது டுவிட்டர் தளத்தில் தனது அதிரடியான, சுவாரசியமான கருத்துகளைப் பதிவு செய்து தமிழக அரசியல் நிலவரத்தை மேலும் கலகலப்பாக்கி வருகிறார்.

-செல்லியல் தொகுப்பு