Home One Line P2 “அரசியலில் இருந்தே ஒதுங்குகின்றேன்” – சசிகலா அதிரடி அறிவிப்பு

“அரசியலில் இருந்தே ஒதுங்குகின்றேன்” – சசிகலா அதிரடி அறிவிப்பு

1000
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாட்டு அரசியலில் எதிர்பாராத திருப்பமாக அரசியலில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக சசிகலா நடராஜன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (மார்ச் 3) இரவு  இந்த அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியல் களத்தையே நிலைதடுமாறச் செய்திருக்கிறார் சசிகலா.

சிறையிலிருந்து வெளியானவுடன் தமிழக அரசியலில் ஒரு சுற்று வருவார், அதிமுகவுக்கு பெரும் சவாலாக இருப்பார், அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளைப் பிரிப்பார் என்றெல்லாம் அரசியல் ஆய்வாளர்கள் கணித்து வந்த வேளையில் அத்தனை ஆரூடங்களையும் தனது அறிக்கையின் மூலம் பொய்யாக்கி உள்ளார் சசிகலா.

#TamilSchoolmychoice

“ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர அவரது உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி என ஜெயலலிதா அடையாளம் காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும்.என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஜெயலலிதா இருந்தபோது எப்படி அவரது எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்” எனவும் சசிகலா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா எடுத்துள்ள முடிவு அதிமுக தொண்டர்களிடத்திலும், ஜெயலலிதா-சசிகலா விசுவாசிகளிடத்திலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெளிவான தனது முடிவின் மூலம் தமிழக மக்கள் மனங்களில் சசிகலா தனது மதிப்பையும் கௌரவத்தையும் உயர்த்திக் கொண்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.

சசிகலா பிளவால் குளிர்காயலாம், பிளவுபடும் அதிமுக வாக்குகளைக் கவரலாம் என திட்டமிட்டுக் கொண்டிருந்த திமுகவின் எண்ணத்தில் சசிகலா அறிக்கை மண்ணை வாரிப் போட்டிருக்கிறது.

தினகரன் அதிர்ச்சி

சசிகலா அறிக்கை எனக்கு அதிர்ச்சியையும் மனச் சோர்வையும் தருகிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சசிகலாவை இணைத்துக் கொள்வதன் மூலம் அரசியலில் தன் முத்திரையைப் பதிக்கலாம் என வியூகம் வகுத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்த தினகரன் திட்டமும் இப்போது உருக்குலைந்து விட்டது.

சசிகலாவின் இந்த முடிவால் அவரின் ஆதரவு வாக்குகள் அதிமுகவுக்கே திரும்பும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அதே வேளையில் தன்மீது வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பிய திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்திருப்பதால், அதிமுக தொண்டர்களிடையே சசிகலா மீதான மதிப்பு மேலும் உயரும்.

சசிகலா வழக்கு என்னவாகும்?

இதற்கிடையில் எதிர்வரும் மார்ச் 15-ஆம் தேதி தானே அதிமுக பொதுச் செயலாளர் என சசிகலா தொடுத்திருக்கும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கை சசிகலா தொடர்ந்து நடத்துவாரா? அல்லது அந்த வழக்கிலிருந்தும் தன்னை மீட்டுக் கொள்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சசிகலாவின் புதிய வியூகமா இது?

இதற்கிடையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் நெருங்கிப் பழகி தமிழக அரசியலின் அத்தனை சூட்சுமங்களையும் அறிந்திருக்கும் சசிகலாவின் இன்னொரு புதிய வியூகமாக, அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவு இருக்கலாம் என்றும் கருதலாம்.

இந்த அறிக்கையின் மூலம் திமுகவுக்கு எதிரான அதிமுக வாக்கு வங்கியை சசிகலா அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். “ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி” என்றால் அது அதிமுக ஆட்சிதான்.

எனவே, மீண்டும் அதிமுக ஆட்சி ஏற்பட பாதை அமைத்துள்ள சசிகலா, அதிமுக பிளவுகளால் பலனடைய நினைத்த திமுகவுக்கும் ஒரு முட்டுக் கட்டை போட்டிருக்கிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றியடைந்தால், அதற்கு சசிகலாவின் முடிவும் ஒரு முக்கியக் காரணம் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கூறுவார்கள். எனவே, இதன் மூலம் சசிகலா தனக்கு ஆதரவான, எதிர்ப்பில்லாத ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துள்ளார். தினகரனிடம் இருந்தும் தன்னைத் தானே விலக்கிக் கொண்டுள்ளார்.

இவையெல்லாவற்றையும் மீறி எடப்பாடி தலைமையிலான அதிமுக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தால், அதன் பின்னர் அதிமுகவினரின் அனைத்துப் பார்வைகளும் சசிகலா பக்கமே திரும்பும்.

எடப்பாடியார் சரியான ஆளுமை இல்லை, சசிகலாதான் சரியான தலைமை, ஆளுமை என்ற எண்ணம் அப்போது விதைக்கப்பட்டு, சசிகலாவை மீண்டும் அதிமுகவுக்குள் இணைத்துக் கொள்ளும் படலங்கள் முடுக்கி விடப்படலாம்.

எனவே, அந்த வகையிலும் தன்னை சரியான முறையில் சசிகலா கட்டமைத்துக் கொண்டுள்ளார்.

இப்படியாக, மேலும் பல புதிய ஆரூடங்களுக்கும் பரபரப்பான அடுத்த கட்ட புதிய கணிப்புகளுக்கும் வித்திட்டுள்ளது சசிகலாவின் அரசியல் விலகல் முடிவு.

-இரா.முத்தரசன்