கோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் கொலை வழக்கில், மலேசியக் காவல்துறையின் விசாரணை மீது வடகொரியாவிற்கு நம்பிக்கை இல்லையென மலேசியாவுக்கான அந்நாட்டு தூதர் காங் சோல் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், அவரை இரு பெண்கள் விஷம் பாய்ச்சி கொலை செய்த சம்பவத்தில் இன்னும் எந்த ஒரு ஆதாரத்தையும் காவல்துறை வெளியிடவில்லை என காங் சோல் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“சம்பவம் நடந்து ஏழு நாட்கள் ஆகிறது. ஆனால் இறப்பிற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான ஆதாரம் கிடைக்கவில்லை. எனவே மலேசியக் காவல்துறையின் விசாரணையை நாங்கள் நம்பவில்லை” என்று காங் சோல் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக மலேசிய அரசாங்கம் மீது குற்றம் சாட்டியிருந்த காங் சோலின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்த மலேசிய அரசு, அது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.