Home Featured நாடு பயங்கரவாதம் தொடர்பில் 7 பேர் கைது!

பயங்கரவாதம் தொடர்பில் 7 பேர் கைது!

1365
0
SHARE
Ad

isis-suspects arrested-கோலாலம்பூர் – பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று நம்பப்படும் 7 பேரை, காவல் துறையினர் பிப்ரவரி 21-க்கும் 26-க்கும் இடைப்பட்ட காலத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்று வட்டாரங்களில் நடத்திய பல்வேறு அதிரடி வேட்டைகளில் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 4 பேர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

காவல் துறை தலைமையகமான புக்கிட் அமானிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புக்கான சிறப்புப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

அந்த சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர் 41 வயதான மலேசிய தொழிற்சாலை தொழில்நுட்பப் பணியாளர் – மற்றொருவர் 28 வயது இந்தோனிசிய விவசாயி ஆவார். 37 வயதுடைய ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி முகமட் வாண்டி முகமட் ஜெடி என்பவரிடம் இருந்து உத்தரவுகளைப் பெற்று செயல்பட்டு வந்ததாகவும் நம்பப்படுகின்றது.

வெடிகுண்டுகளைக் கொண்ட வாகனத்தைக் கொண்டு பெரிய அளவிலான தாக்குதல் ஒன்றை மலேசியாவில் நடத்திவிட்டு, சிரியாவுக்குத் தப்பிச் சென்று அங்கு ஐஎஸ் இயக்கத்தினருடன் இணைந்து கொள்ள அவர்கள் திட்டமிட்டு வந்தனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் இந்தோனிசிய நபர் இதற்கு முன் ஒரு முறை சிரியாவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்து அதன் காரணமாக துருக்கியிலிருந்து வெளியேற்றப்பட்டவராவார்.

கைது செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்காரர்கள் போலி பயணப் பத்திரங்களைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டபோது அவர்கள் கைவசம் இருந்த 270,000 ரிங்கிட் மதிப்புடைய பல்வேறு நாட்டு நாணயங்களும், பல அனைத்துலக கடப்பிதழ்களும் கைப்பற்றப்பட்டன.

(படம்: நன்றி – ஸ்டார் இணையத் தளம்)