சென்னை – ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு, தேர்தல் சின்னமாக இரட்டை மின்கம்பத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். அதேபோல், சசிகலா அணிக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு தரப்புகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம், மற்றும் அதன் கட்சிக் கொடிக்கான சின்னத்தைக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த முறையீட்டை நேற்று புதன்கிழமை புதுடில்லியில் விசாரித்த தேர்தல் ஆணையம், இரண்டு தரப்புகளும், அதிமுக சின்னங்களைப் பயன்படுத்த முடியாது என்றும், சமர்ப்பிக்கப்பட்ட வாதங்கள், ஆவணங்கள் தொடர்பில் மேலும் ஆழமான பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று அதிரடியாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக என்ற பெயரையோ, அதன் சின்னங்களையோ, இரண்டு தரப்புகளும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஓபிஎஸ் அணி சார்பில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கும் மதுசூதனன், இன்று வியாழக்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.