Home Featured உலகம் 304 பேருடன் கடலில் மூழ்கிய தென்கொரியக் கப்பல் – 3 ஆண்டுகளுக்குப் பிறகு மேலே எழுகிறது!

304 பேருடன் கடலில் மூழ்கிய தென்கொரியக் கப்பல் – 3 ஆண்டுகளுக்குப் பிறகு மேலே எழுகிறது!

880
0
SHARE
Ad

sunken Sewol ferryசியோல் – கடந்த 2014-ம் ஆண்டு, 304 பயணிகளோடு கடலுக்குள் மூழ்கிய சுக்கன் சிவோல் என்ற தென்கொரியக் கப்பலை மேலே கொண்டு வரும் பணி, நேற்று புதன்கிழமை துவங்கியது.

இன்று வியாழக்கிழமை நிலவரப்படி, சுமார் 144 அடி ஆழத்தில் இருந்த அக்கப்பல் மெல்ல மேலே, வரத் தொடங்கியிருப்பதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி, தென்மேற்கு கடற்பகுதியில் அக்கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போது, கடலில் மூழ்கியது. வழக்கத்தைவிடக் கூடுதலான எடையுடனும், அதிவேகத்துடனும் சென்றதால் தான் அக்கப்பல் கடலில் மூழ்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

#TamilSchoolmychoice

இவ்விபத்தில் 304 பயணிகள் மரணமடைந்தனர். அவர்களில் 295 சடலங்கள் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னும் 9 சடலங்கள் மீட்கப்படாமலேயே இருக்கிறது.

பயணிகளில் பெரும்பாலானவர்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தான். குறிப்பாக 250 பேர் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள். கப்பல் மூழ்கவிருந்த நேரத்தில், கப்பல் கேப்டன் மற்றும் பணியாளர்களின் உத்தரவுக்குக் கீழ்பட்டு அவர்கள் அனைவரும் அவர்களது அறையிலேயே இருந்தனர். ஆனால், கப்பல் கேப்டனும், பணியாளர்களும் மூழ்கிய அக்கப்பலில் இருந்து தப்பித்துச் சென்றனர்.

கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை

பயணிகளுக்கு சரியாக பாதுகாப்பு அளிக்காமல் தான் தப்பித்தது குறித்து, அக்கப்பலின் கேப்டன் லீ ஜூன் சியோக், பலமுறை இச்சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டிருந்தார்.

“இந்த விபத்து எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியவில்லை. கப்பலில் இருப்பவர்கள் பலியாகட்டும் என்ற எண்ணத்துடன் நான் தப்பிக்கவில்லை” என்று ஊடகங்களிடமும், நீதிமன்றத்திடமும் தெரிவித்திருந்தார்.

என்றாலும், கப்பல் விபத்தின்போது பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காத கேப்டனுக்கு, கடந்த 2015-ம் ஆண்டு, 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது தென்கொரிய நீதிமன்றம். கேப்டனோடு, பணியாளர்கள் சிலருக்கும் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.

இந்நிலையில், கடந்த வாரம், இக்கப்பலை கடலுக்குள் இருந்து வெளியே கொண்டு வர, தென்கொரிய அரசு 85 பில்லியன் வான் (75 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனம் ஒன்று அக்கப்பலை மேலே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. கப்பல் முழுமையாக வெளியே வர இன்னும் 12 அல்லது 13 நாட்கள் ஆகும் என்றும் அந்நிறுவனம் அறிவித்திருக்கின்றது.