கோலாலம்பூர் – இந்தியா – மலேசியா இடையிலான 60 ஆண்டுகால வலுவான நட்புறவை முன்னிட்டு, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு தனது அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்கிறார்.
வெள்ளிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை, 5 நாட்கள், பிரதமர் நஜிப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என பெர்னாமா கூறுகின்றது.
இது குறித்து வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நஜிப்பின் இந்தியப் பயணத்தின் மூலம், மலேசியா, இந்தியா இடையில் உள்ள இருதரப்பு வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியா செல்லும் நஜிப், புதுடெல்லி, ஜெய்பூர் மற்றும் சென்னை ஆகிய மூன்று மாநிலங்களுக்குச் செல்வார் என்றும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
நஜிப்புடன், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோர், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அமான் மற்றும் அமைச்சரவையைச் சேர்ந்த இன்னும் சில அமைச்சர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள் உடன் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.