Home வணிகம்/தொழில் நுட்பம் காஜாங் சாத்தே – பிரபலமாக்கிய ஹாஜி சமூரி ஜூராய்மி காலமானார்!

காஜாங் சாத்தே – பிரபலமாக்கிய ஹாஜி சமூரி ஜூராய்மி காலமானார்!

950
0
SHARE
Ad

satay-kajang-haji samuri-காஜாங் – சிலாங்கூர் மாநிலத்தின் காஜாங் நகர் என்று கூறினாலே உணவுப் பிரியர்களின் நினைவுக்கு வருவது ‘சாத்தே’ என்ற உணவு வகைகள்தான். அந்த உணவு வகைகளைப் பிரபலமாக்கி அதனைத் தன் பெயரோடு இணைத்து ஒரு வணிக முத்திரையாக உருவாக்கிய ஹாஜி சம்சுரி ஜூராய்மி நேற்று சனிக்கிழமை அதிகாலை தனது 73-வது வயதில் காலமானார் என ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

பாரம்பரிய மலாய் உணவாகக் கருதப்படுவது ‘சாத்தே’. கோழி, ஆடு, மாடு ஆகிய இறைச்சி வகைகளை ஒரே அளவுடன் துண்டுத் துண்டாக வெட்டியெடுத்து, ஒரு தென்னங் குச்சியில் செருகி, அதற்குரிய சாந்துகளைக் கலந்து ஊறப்போட்டு, நன்கு பதப்படுத்திய பின்னர் அதனை நெருப்பில் வாட்டியெடுத்து பரிமாறப்படும் – அனைத்து மலேசியர்களையும் கவர்ந்த -உணவு இது. கூடவே, தொட்டுக் கொள்ள நிலக்கடலையை வறுத்து நசுக்கி, தயாரிக்கப்பட்ட ஒருவகையான சிறப்பான சாந்தும் சேர்த்து பரிமாறப்படும்.

இந்த சாத்தே உணவு வகைகள் மலேசியாவில் முலை முடுக்கெங்கும் கிடைக்கும் என்றாலும், காஜாங் நகர் மட்டும் சாத்தேக்குப் பெயர் பெற்றதாகும்.

#TamilSchoolmychoice

Sate-Kajang-Hj-Samuri-founder-ஹாஜி சமூரி சிறந்த உணவுத் தயாரிப்புக்காக ஸ்டார் ஆங்கில நாளேட்டின் விருதையும் வென்றவராவார் ( படம் : நன்றி – ஸ்டார் இணையத் தளம்)

ஹாஜி சமூரி (படம்) 1992-ஆம் ஆண்டில், சாத்தே விற்பனை செய்யும் ஒரு சிறிய உணவகத்தைத் தொடக்கினார். நாளடைவில் அவரது பெயரைத் தாங்கிய கடைகள் எண்ணிக்கையில் விரிவடைந்தன. அவரது சிறிய உணவகமும் விற்பனை பெருகிய காரணத்தால் மிக விசாலமான உணவகமாக உருவெடுத்தது.

சிலாங்கூர் முழுக்க முக்கிய நகரங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் 19 கடைகள் ‘சாத்தே காஜாங் ஹாஜி சமூரி’ என்ற பெயரைத் தாங்கி வணிகத்தில் ஈடுபட்டிருக்கின்றன.

சாத்தே உணவு தயாரிக்கும் கலையை சமூரி ஏழாம் படிவம் படிக்கும் மாணவனாக இருந்தபோதே, மேற்கு ஜாவாவில் இருந்து வந்த இந்தோனிசியக் குடியேறி ஒருவரிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டார்.

சாத்தே விற்பனை செய்த அவருக்கு உதவியாளராக சமூரி பல ஆண்டுகள் பணிபுரிந்து சாத்தே உணவைச் சிறப்பாகத் தயாரிக்கும் கலையைக் கற்றுக் கொண்டார். அரசாங்க வேலையில் சேர்ந்தாலும் பின்னர் அந்த வேலையிலிருந்து விலகிவிட்டு 1992-ஆம் ஆண்டில் சொந்த உணவகத்தைத் தொடக்கினார்.

காஜாங் நகரெங்கும் பல சாத்தே கடைகள் இருந்தாலும், சமூரியின் கடை மட்டும் இறுதிவரை அதன் சுவையான தயாரிப்புக்காக ஆயிரக்கணக்கானோரை ஈர்த்து வந்தது.