திருச்சி – நீட் தேர்வு காரணமாக மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்காத மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது.
நேற்று திருச்சி அரியலூரில் நடைபெற்ற அனிதாவின் இறுதிச் சடங்குகளில் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியதோடு, நீட் தேர்வு குறித்து தமிழக, மத்திய அரசுகளுக்கு எதிராக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்து அனிதாவின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, திமுக சார்பில் 10 இலட்சம் ரூபாய் நிதியை அனிதாவின் குடும்பத்தினரிடம் அளித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், சீமான், இயக்குநர் அமீர், நடிகர் சிவகார்த்திகேயன், அதிமுகவின் டிடிவி தினகரன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, என தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரும் கட்சி வேறுபாடின்றி அனிதாவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர்.
அனைவரும் நீட் தேர்வு தொடர்பில் தமிழக அரசையும், மத்திய அரசையும் கடுமையாகத் தாக்கித் தங்களின் கருத்துகளை வெளியிட்டனர்.