கோலாலம்பூர், மார்ச் 11 – மாயமான மாஸ் MH370 விமானத்தை தேடி மீட்பு படை விமானங்களும், கப்பல்களும் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், உலக மக்கள் அனைவரும் அதிலுள்ள பயணிகள் நலமுடன் இருக்க பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மலேசிய மக்கள் முகநூல் வழியாகவும், மெழுகுவர்த்திகள் ஏந்தியும், ஆலயங்களில் வழிபாடுகள் செய்தும் பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்திருக்க பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த பிரபல போமோ (shaman) இப்ராகிம் மாட் ஸின் (ராஜா போமோ செடுனியா நுஜும் விஐபி), விமானத்தை கண்டுபிடிப்பதற்கு தேவையான பிரார்த்தனைகள் செய்ய தன்னை மலேசியாவின் உயர் பதவியில் இருக்கும் தலைவர்களுள் ஒருவர் அழைத்ததாகத் தெரிவித்தார்.
அவர் தனது பிரார்த்தனைகளை விமான நிலையத்தின் முகப்பில் செய்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் மீன் பிடிக்கும் தூண்டிலையும், மூங்கில் தூர நோக்கிகளையும் ( bamboo binoculars) வைத்து விமானத்தை தேடினோம். பிரார்த்தனை செய்யும் போது எனது கண்கள் காயப்பட்டன. பார்வை இருட்டானது. ஒருவேளை விமானம் இன்னும் வானில் இருக்கலாம் அல்லது கடலில் விழுந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் இன்னும் 2 நாட்களில் சிறப்பு பிரார்த்தனைகள் முடிந்து மீண்டும் விமான நிலைத்திற்கு வருவதாகவும், அப்போது நிச்சயம் தகவலை கொண்டு வருவதாகவும் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், பயணிகள் மீண்டும் நலமுடன் திரும்ப அனைவரையும் பிரார்த்தனை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.